Jan 26, 2020, 3:28 AM IST
குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதியான இன்று அதிகாலை ஒன்று முப்பது மணி அளவில் செங்கல்பட்டு டோல்கேட் பொதுமக்களால் அடித்து சூறையாடப்பட்டது.
அரசு பேருந்து ஒன்று செங்கல்பட்டு டோல்கேட் கடக்கும்போது ஓட்டுனருக்கும் டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. வட மாநிலத்தை சேர்ந்த டோல்கேட் ஊழியர்கள் அரசு பேருந்து ஓட்டுநரையும் நடத்துனரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அப்போது வீடியோ எடுத்தவர்களின் மொபைல் போனையும் பிடுங்கி உடைக்கப்பட்டுள்ளது. மேலும் டோல்கேட் முழுவதுமுள்ள அனைத்து வழி கட்டணம் வசூலிக்கும் பூத்களை அடித்து சுக்குநூறாக அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் பல வாகனங்களும், பேருந்துகளும் டோல்கேட்டை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து காவலருக்கு தகவல் தெரிவித்த உடன் விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எதனால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது? சுங்கசாவடி ஊழியர்களுக்கும் அரசு பேருந்து நடத்துநருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்ததா எனவும், டோல்கேட் சேதபடுத்தியதற்கு முக்கிய நோக்கம் என்ன? யாரெல்லாம் இதில் ஈடுபட்டு உள்ளனர் ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே இது குறித்து முழு தகவல் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது