Aug 22, 2022, 9:43 AM IST
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்க உள்ளது.
இந்தநிலையில், பரந்தூரில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் வகையில் 73 ஏக்கர் நிலம், ஏக்கர் அளவீட்டுக்குப் பதிலாக, சதுர அடியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், பரந்தூர் கிராமத்தில் ஒரு ஏக்கருக்கு வழிகாட்டி மதிப்பு ரூ. 8.71 லட்சம், ஆனால் 43,560 சதுர அடி கணக்கில் வழிகாட்டி மதிப்பு ரூ.65.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நிலம் கையப்படுத்தும் நேரத்தில் கருவூலத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதாவது அரசு 73 ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.191 கோடி செலுத்த வேண்டும் என அந்த புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.