Sep 22, 2022, 10:47 AM IST
வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிகாலை 2.30 மணியிலிருந்து தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை, பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளுடன் அமலாக்கத் துறையினர் இணைந்து பாப்புலர் ஆப் ப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாலையிலிருந்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை
கோவை கரும்புக்கடையைச் சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ எஸ் இஸ்மாயில் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள அறிவகம் பெண்கள் மதராஸா பள்ளியிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. டெல்லி மற்றும் சென்னையில் உள்ள புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் சீனிவாசன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒட்டி ஏர்வாடி பகுதியில் சுமார் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெற்று வரும் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு காவல்துறையினர் யாரையும் அனுமதிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பண்பொழியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் முகம்மது அலி ஜின்னா வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கர்நாடகா:
மங்களூருவில் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சோதனை தொடங்கியது. இந்த அமைப்புகளின் தலைவர்களின் வீடுகள், மங்களூரு நெல்லிகாய் சாலையில் அமைந்துள்ள அலுவலகங்கள் உள்பட நகரின் 8 பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள் அமைந்துள்ள நெல்லிகாய் சாலையின் இருபுறமும் சிஆர்பிஎப் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். அலுவலகத்திற்குள் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை கண்டித்து இந்த அமைப்பினர் கோ பேக் என்ஐஏ கோஷங்களை எழுப்பினர்.