புஷி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நீரில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

Jul 1, 2024, 10:05 AM IST

புனேவில் இருக்கும் லோனாவாலா பகுதியில் புஷி அணை இருக்கிறது.  இங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று மதியம் 12.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2 குழந்தைகளை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் ஷாஹிஸ்தா அன்சாரி (36), அமிமா அன்சாரி (13), உமேரா அன்சாரி (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அட்னான் அன்சாரி (4) மற்றும் மரிய சையத் (9) ஆகியோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் புனே நகரின் சயாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

புனே ஊரக எஸ்.பி பங்கஜ் தேஷ்முக் இதுகுறித்து பேசிய போது “ ஒரு பெண்ணும் நான்கு குழந்தைகளும் லோனாவாலாவில் உள்ள பூஷி அணை அருகே உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். ஆனால் அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களின் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; ஐந்து பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் விடுமுறை நாளை மகிழ்ச்சியாக கழிக்க ஒருநாள் சுற்றுலா வந்தவர்கள்.” என்று தெரிவித்தார்.

லோனாவாலா காவல்துறை மற்றும் அவசரகால சேவைகள் நீரில் மூழ்குபவர்கள் மற்றும் மீட்புக் குழுக்களை உள்ளடக்கிய மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். காணாமல் போன குழந்தைகளை தேடும் பணி இன்றும் தொடர்ந்து வருகிறது. நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 உறுப்பினர்கள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, இந்த பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.