Nov 19, 2022, 10:46 AM IST
கடந்த ஜூன் மாதம் டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீடு மற்றும் அவரது அலுவலகம், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது, ரூ.2.82 கோடி, 133 தங்கக்காசுகள் உட்பட 1.80 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தது.
சிசிடிவி காட்சியின்படி, செப்டம்பர் 13ஆம் தேதி இரவு 11:11 மணியளவில் இது காட்சியாகி இருக்கிறது. சிசிடிவியின் இடது பக்கத்தில் செல் எண் 1A பிளாக் தெரிகிறது. கிடைத்த தகவலின்படி சத்யேந்திர ஜெயின் இந்த பிளாக்கில்தான் அடைக்கப்பட்டு இருக்கிறார். சிசிடிவியில் காட்சியில், ஜெயின் படுக்கையில் ஓய்வெடுப்பதைக் காணலாம். அவர் கையில் சில காகிதங்களை வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார், மறுபுறம், மசாஜ் செய்பவர் தொடர்ந்து அவரது கால்களை அழுத்தி விடுகிறார். காலில் எண்ணெய் தடவிக் கொடுக்கிறார்.
மசாஜ் மட்டும் இல்லை. அவரது அறைக்குள் சகல வசதிகளும் இருப்பது வீடியோவில் பார்க்கலாம். கட்டில், மெத்தை, தலையணை, நாற்காலி, தண்ணீர் பாட்டில்கள், ரிமோட் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயின் சகல வசதிகளுடனும் இருக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் இன்று சிசிடிவி வீடியோ மூலம் உறுதியாகி இருக்கிறது.
இந்த வார துவக்கத்தில், டில்லி திகார் சிறை கண்காணிப்பாளர் ஒருவர் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சலுகைகள் செய்த குற்றச்சாட்டின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில்தான் இந்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், இது பழைய வீடியோ. ஏற்கனவே குறிப்பிட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
சத்யேந்திர ஜெயின் மீது சட்ட விரோத பணம் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் சிபிஐ கடந்த 2017, ஆகஸ்ட் 24 ஆம் தேதி எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. திகார் சிறையில் இருக்கும் விஐபிக்கள் இதுபோன்று சலுகைகள் பெறுவது வாடிக்கைதான் என்றாலும், குஜராத் தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் சத்யேந்திர ஜெயின் தொடர்பான இந்த வீடியோ வெளியாகி இருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
சிறையில் உல்லாசம்.! அமைச்சருக்கு 60 கோடி கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி