ஹம்பியில் பாரம்பரிய நடனமாடிய கர்நாடக முதல்வர் சித்தராமையா.. வைரல் வீடியோ..

Nov 3, 2023, 11:15 AM IST

மைசூரில் இருந்து கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட 50 ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் சித்தராமையா, விஜயநகர மாவட்டம் ஹம்பிக்கு சென்றுள்ளார். பெங்களூரு: ஹம்பியில் ‘கர்நாடக சம்பிரமா-50’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த முதல்வர் சித்தராமையா நேற்றிரவு ‘வீர மக்களா குனிதா’ குழுவில் இணைந்து நாட்டுப்புற நடனம் ஆடினார். அவரின் நடனத்தை பார்த்து அங்கிருந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆரவாரம் செய்தனர்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ள முதலமைச்சர் சித்தராமையா, நடனமாடும் போது தனது குழந்தைப் பருவ நாட்களை நினைவு கூர்ந்ததாகக் கூறினார். ஒரு பிரமாண்ட மேடையில் மற்ற கலைஞர்களுடன் சேர்ந்து சித்தராமையா உற்சாகமாக நடனமாடுவதை அந்த வீடியோவில் பார்க்கலாம்.

முதல்வர் தனது நடனத் திறனை வெளிப்படுத்துவது இது முதல் முறையல்ல, கடந்த ஆண்டு மைசூரு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான சித்தராமனஹூண்டியில் நடந்த கோயில் திருவிழாவின் போது அவர் நடனமாடினார். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கோவில் தெய்வமான சித்தராமேஸ்வரர் திருவிழா நடத்தப்பட்டு, 'வீரமக்கள குனித' நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம், முதலமைச்சர் அதில் தவறாமல் கலந்து கொள்வார்.

வீர மக்கள் குனிதா என்பது மாநிலத்தின் பல பகுதிகளில், குறிப்பாக மைசூர் பகுதியில் இன்னும் நடைமுறையில் இருக்கும் ஒரு நாட்டுப்புற நடன வடிவமாகும். முதல்வர் சித்தராமையா தனது குழந்தைப் பருவத்தில் சித்தராமனஹூண்டியில் உள்ள நஞ்சேகவுடா என்ற ஆசிரியரிடம் நடனக் கலையை கற்றுக்கொண்டார். நடன வகுப்புகளின் போது, முதல்வர் அதே ஆசிரியரிடம் கன்னடம் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார்.

அவர் தனது குழந்தைப் பருவத்தில் சுத்தூர் மடத்தின் பீடாதிபதியிடம் இருந்து தனது முதல் பாராட்டு மற்றும் 5 ரூபாய் பரிசு பெற்றார். ஆனால், கிராமப் பெரியவர்களுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் ஆசிரியர் கிராமத்தை விட்டு வெளியேறியதால் நடன வகுப்புகளை முடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.