Jun 28, 2024, 9:11 AM IST
புது டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1-ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் பெய்த கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த டாக்சிகள் உட்பட கார்கள் மீது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி தீயணைப்பு சேவைக்கு கூரை இடிந்து விழுந்தது தொடர்பான அழைப்பு வந்தது. டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி இதுகுறித்து பேசிய போது “காலை 5.30 மணியளவில், டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1ல் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக அழைப்பு வந்தது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் விளைவாக, டெல்லி சர்வதேச விமான நிலைய நிர்வாகம், டெர்மினல் 1 இலிருந்து அனைத்து புறப்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக செக்-இன் கவுண்டர்கள் மூடப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்று அதிகாலையில் இருந்து பெய்த கனமழை காரணமாக, டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் பழைய டிபார்ச்சர் ஃபோர்கோர்ட்டில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.சிலர் காயமடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் வழங்க அவசரகால பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, சம்பவத்தை நேரில் கண்காணித்து வருகிறார், மீட்பு பணிகள் இன்னும் நடந்து வருகிறது..” என்று டெல்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவரின் பதிவில் "டி1 டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறோம். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உதவுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் இன்னும் தொடர்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் இடிந்து விழுந்த மேற்கூரை, 2008-09 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பணியை GMR காண்ட்ராக்டர்ஸ் என்ற தனியார் நிறுவனம் செய்ததாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன..
டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது, பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.