கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள 'விஜயானந்த்' படத்தின் ட்ரைலரை இன்று கர்நாடக முதல் மந்திரி வல்சராஜ் பொம்மை கலந்து கொண்டு வெளியிட்டுள்ளார்.
'ட்ரங்க்' படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் தான் 'விஜயானந்த்'. இதில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். 'ஸ்கெட்ச்' படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, படத்தை வெளியிட படக்குழு தயாராகியுள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்துள்ளது. வி ஆர் எல் நிறுவன அதிபர் விஜய் சங்கேஸ்வரா வாழ்க்கை வரலாறு குறித்து கன்னடத்தில் உருவாகியுள்ள விஜய் ஆனந்த் பட ட்ரைலரை கர்நாடக முதல் மந்திரி வல்சராஜ் பொம்மை கலந்துகொண்டு வெளியிட்டுள்ளார். இதில் ஒரு மனிதன் தனித்து நிற்பதற்கு எப்படி பட்ட போராட்டங்களையும், சவால்களையும் கடக்கவேண்டியுள்ளது என்பது குறித்து விறுவிறுப்பு மற்றும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத காட்சிகளுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது.