Jun 18, 2024, 10:34 PM IST
தேவகோட்டையில் பிறந்து, தமிழ் சினிமாவில் தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்த கலைஞர்களில் விதார்த்தும் ஒருவர். கடந்து 2001ம் ஆண்டு வெளியான "மின்னலே" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் அட்மாஸ்பியர் நடிகராகவும், துணை நடிகராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
தளபதி விஜயின் "குருவி" திரைப்படத்தில் கூட ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். இந்த சூழலில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான பிரபு சாலமனின் "மைனா" என்கின்ற திரைப்படம் விதார்த் அவர்களின் கலைப் பயணத்தை புரட்டிப்போட்ட ஒரு திரைப்படமாக மாறியது. நார்வே தமிழ் திரைப்பட விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக தமிழில் நல்ல பல படங்களில் நடித்து வரும் விதார்த், இந்த 2024ம் ஆண்டில் ஏற்கனவே "டெவில்" மற்றும் "அஞ்சாமை" ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சாஜி சலீம் என்பவர் இயக்கியுள்ள "லாந்தர்" என்கின்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விதார்த் நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.