Jun 28, 2024, 8:59 AM IST
நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கவுரவிப்பதை கடந்த ஆண்டு முதல் செய்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த இந்த விழா சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை நீடித்தது. இதனால் நடிகர் விஜய் சுமார் 12 மணிநேரம் ஒரே இடத்தில் நிற்கும் நிலை உருவானது.
இருப்பினும் அந்த விழாவை இறுதிவரை நடத்திக் கொடுத்த விஜய்க்கு பாராட்டுக்களும் குவிந்தன. இந்த நிலையில், இந்த ஆண்டும் அதேபோல் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்த ஆண்டு சரியான திட்டமிடல் உடன் இந்த விழா இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த விழா மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோருக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் விழா என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த விழாவில் நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். குறிப்பாக அரசியல்வாதியாக நடிகர் விஜய் பங்கேற்கும் முதல் விழா இதுவாகும். இந்த விழாவில் என்னென்ன நடக்க உள்ளது என்பதை இந்த வீடியோவில் நேரலையில் காணலாம்.