சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் என வரிசையாக மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சிவா. இதுவரை கமர்ஷியல் படங்களை மட்டும் இயக்கி வந்த சிவா, தற்போது முதன்முறையாக பேண்டஸி கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் பெயர் கங்குவா. அப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் அண்மையில் வெளிவந்த ஃபயர் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
இதையும் படியுங்கள்... கண்டுகொள்ளாத விஜய், அஜித்... வயநாடு மக்களின் துயர் துடைக்க கர்ணனாக மாறி கோடிகளை வாரி இறைத்த பிரபலங்கள் லிஸ்ட்
கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. அப்படத்தின் முதல் பாகம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். கங்குவா படத்தின் பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. பிரம்மிப்பூட்டும் காட்சிகளுடன், பாகுபலிக்கே சவால் விடும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கி இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். மேலும் சூர்யாவின் நடிப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் மெர்சலாக இருப்பதாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.
இதையும் படியுங்கள்... சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. புதிய போஸ்டருடன் வெளியான புதிய அப்டேட் - இன்னும் ஒரு நாள் தான் இருக்கு!