
தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ‘குபேரா’. இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்க வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகி ஐந்து நாட்களை கடந்துள்ள நிலையில், படம் ரூ.55 கோடிகளை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சேகர் கம்முலாவிற்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், அந்த மாநிலங்களில் படத்தின் வசூல் அதிகமாக உள்ளது. 70% வசூல் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்தும், மீதி 30% தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு தனுஷ் ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இரு மொழிகளில் உருவாகியிருந்த போதிலும் இயக்குனர் தெலுங்கு என்பதால் வெற்றி விழா எல்லாம் ஆந்திராவிலேயே கொண்டாடப்பட்டு விட்டது.
ஆந்திராவில் வசூலில் முன்னணியில் இருக்கும் ‘குபேரா’ திரைப்படம் தமிழில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. படத்தின் நீளம், பல இடங்களில் ஏற்பட்ட லாஜிக் மீறல்கள், திரைக்கதை நகரும் வேகம், இரண்டாம் பாதியில் ஏற்படும் சலிப்பு ஆகியவை படத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சில திரை விமர்சகர்களும் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்களையே கூறினர். இதன் காரணமாக படத்தின் வசூல் தமிழகத்தில் குறையத் தொடங்கியுள்ளது. மேலும் அடுத்த வாரத்தில் பல தமிழ்ப் படங்கள் வெளியீட்டிற்கு வரிசை கட்டி நிற்பதால் ‘குபேரா’ படத்திற்கான வசூல் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே படத்தை விரைவாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு படம் வெளியாகி குறைந்தது மூன்று வாரங்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வரிசையில் ஜூலை 18-ஆம் தேதி அதிகபட்சமாக ‘குபேரா’ படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.47 கோடிக்கு வாங்கி உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. படத்தின் வசூல் நிலவரங்களை பொறுத்தே எப்போது ஓடிடி தளத்தில் படம் வெளியிடப்படும் என படக்குழு அறிவிக்கும். ஆனால் ஓடிடியில் வெளியாகும் வரை காத்திருந்து படத்தை பார்க்க வேண்டாம். தனுஷுக்காக ஒரு முறை இந்த படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்கலாம் என்று தனுஷின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.