
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர். விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்ற பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும், மாடலாகவும் வலம் வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீசன் 2வில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த தொடரில் ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களிடையே பிரபலமானார். இவருக்கு திருப்புமுனையைக் கொடுத்த ஒரு தொடர் என்று சொன்னால் அது ‘சரவணன் மீனாட்சி’ தான். 2013 ஆம் ஆண்டு தொடங்கி 2016 வரை ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2வில் சரவணனின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன்பின்னர் இவர் ‘ஆண்டாள் அழகர்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்கிற சீரியல்களில் நடித்தார். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்கிற சீரியலில் கத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவருக்கு ரசிகர்களிடையே நல்ல ரீச் கிடைத்தது. இதை பயன்படுத்தி அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். தன்னுடைய இயல்பான பேச்சு, நகைச்சுவை உணர்வு, நேர்மையாக விளையாடிய விதம் ஆகியவற்றின் காரணமாக பிக் பாஸ் ரசிகர்களின் அன்பைப் பெற்றார். இதன் காரணமாக சீசன் 5 போட்டியாளராகவும் அவர் வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக அவருடைய ரசிகர் பட்டாளம் மேலும் பெருகியது.
சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். ‘நட்புனா என்னனு தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’, ‘டான்’ போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படம் தான் ‘பன் பட்டர் ஜாம்’. Gen Z தலைமுறையின் உறவுகளைப் பற்றி பேசும் நகைச்சுவையான கோணத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராகவ் மிர்தாத் என்பவர் இயக்கியிருக்கிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா ட்ரிக்கா ஆகியோ நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜய் டிவி தொகுப்பாளர் பப்பு ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரெயின் ஆப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. படத்திலிருந்து “தியா தியா..” என்கிற சித் ஸ்ரீராம் பாடியுள்ள பாடல் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஸ்டீலர் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் மகன் ராஜூவுக்கும், சரண்யா பொன் வண்ணனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜூ தனது முதல் நாள் கல்லூரி அனுபவத்தை தாயிடம் நகைச்சுவையாக கூறும் ஐந்து நிமிடக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.