
Kaantha movie trailer : துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா' படத்தின் டிரெய்லர் வெளியானது. செல்வாமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து ஜோம் வர்கீஸ், ராணா டகுபதி, மற்றும் பிரசாந்த் பொட்லூரி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் நவம்பர் 14 அன்று உலகளவில் வெளியாகிறது. நடிகர் துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் இது ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதை டிரெய்லர் மூலமே உணர முடிகிறது.
படத்தின் பாடல்களும் பெரும் ரசிகர் கவனத்தை ஈர்த்துள்ளன. சமீபத்தில் "ரேஜ் ஆஃப் காந்தா" என்ற பெயரில் வெளியான படத்தின் டைட்டில் பாடல் சமூக ஊடகங்களில் வைரலானது. ஒரு தமிழ் - தெலுங்கு ராப் கீதமாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர, முன்னதாக வெளியான "பனிமலரே" மற்றும் "கண்மணி நீ" எனத் தொடங்கும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
காந்தா திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்சே, ராணா டகுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 1950-களில் மெட்ராஸ் பின்னணியில் நடக்கும் கதை தான் இந்த "காந்தா". "தி ஹன்ட் ஃபார் வீரப்பன்" என்ற நெட்ஃபிக்ஸ் டாக்குமெண்ட்ரி சீரிஸை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் செல்வாமணி செல்வராஜ் இயக்கும் முதல் படம் காந்தா. இப்படம் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அதன் டிரெய்லரை படக்குழு வெளியிட்டு உள்ளது. விண்டேஜ் கெட் அப்பிலும் நடிப்பிலும் அசத்தி இருக்கிறார் துல்கர் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது.
அண்மையில் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த லோகா மாபெரும் வெற்றியை ருசித்த நிலையில், அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் பிற மொழிப் படம் என்கிற பெருமையை 'காந்தா' பெற்றுள்ளது. தமிழில் உருவாகியுள்ள இப்படம் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. லக்கி பாஸ்கர் படத்திற்குப் பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் படம் இது என்பதால், இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.