பதினைந்து பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய மோட்டார் பைக்கை தயாரித்து இந்தியத் தொழில் தொடர்புக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழக மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். இந்த பைக் இரண்டு சாதனைகளில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர்
பதினைந்து பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய மோட்டார் பைக்கை தயாரித்து இந்தியத் தொழில்தொடர்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழக மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். இந்த பைக் இரண்டு சாதனைகளில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
திருவள்ளூர் மாவட்டம், யுனைடெட் காலனியில் இந்தியத் தொழில்தொடர்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் ஒன்று உள்ளது. ஐந்து வருடங்களாக இயங்கிவரும் இங்கு நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை எதாவது புதியக் கண்டுபிடிப்புகளை செய்து இங்கு பயிலும் மாணவர்கள் நம்மை ஆச்சர்யபடுத்தி வருகின்றனர். தற்போது இவர்கள் கண்டுபிடித்திருப்பதை பார்த்தால் நீங்கள் கார் வாங்கவே மாட்டீர்கள்.
ஆம். 15 பேர் உட்கார்ந்து செல்லக் கூடிய இரு சக்கர பைக்கை வடிவமைத்துள்ளனர். இந்த பைக்கை தயாரிக்க ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். எட்டு மாதங்கள் தங்களது கடின உழைப்பைப் போட்டு 70 மாணவர்கள் சேர்ந்து இந்த சூப்பர் பைக்கை வடிவமைத்து உள்ளனர்.
இந்த பைக் ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பாராட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இந்த விழாவில் மாணவர்கள் சாதனைப் படைத்ததற்கான சான்றிதழ்களை அதிகாரிகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதில் சோகம் என்னவென்றால் இந்த வாகனம் மக்கள் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படவில்லை என்பதுதான். மாணவர்களின் தொழில் நுட்பத் திறனை மேம்படுத்தவும், சாதனைக்காகவும்தான் இந்த பைக் வடிவமைக்கப்பட்டது.
இந்த விழாவில் இந்தியத் தொழில் தொடர்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழக நிறுவனர் சுந்தர பாண்டியன் கலந்து கொண்டார். அவர், "6.8 மீட்டர் நீளம், 1.2 மீட்டர் அகலம் கொண்ட இந்த பைக் 'டூவீல் டிரைவ்' தன்மை கொண்டது. 12 குதிரைத் திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின், 2 குதிரைத் திறன் கொண்ட எலக்ட்ரிகல் இன்ஜின் மற்றும் 1500 வாட்ஸ் சிலிக்கான் செல் பேட்டரி போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த பைக் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பழைய பைக்குகளின் பாகங்களை கொண்டும், ஒருசில பாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்தும் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக இந்த வாகனம் கின்னஸ் சாதனையில் இடம் பெற நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
மாணவர்களுக்குத் தொழில் சம்பந்தப்பட்ட கல்வியைக் கற்றுத் தருவதோடு அவர்களின் ஆர்வம் மற்றும் திறமையைப் புரிந்துகொண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். நாங்கள் கண்டுபிடித்த பேட்டரியால் இயங்கும் ஆட்டோ இந்திய அளவில் நான்காவது இடம்பெற்று பரிசுகளை வென்றுள்ளது" என்று பெருமையுடன் தெரிவித்தார்.