மத்திய, மாநில ஊரக வளர்ச்சி துறை சார்பில், பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள், கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்காக செயல்படுகின்றன. கடந்த, 2014ம் ஆண்டு முதல் மின்னாளுமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய, மாநில ஊரக வளர்ச்சி துறை சார்பில், பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள், கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்காக செயல்படுகின்றன. கடந்த, 2014ம் ஆண்டு முதல் மின்னாளுமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான அரசுத்துறை சேவைகள், அத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வருவாய் துறை சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு திட்ட விண்ணப்பம், போட்டி தேர்வு விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்ப பதிவு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை 'பிரின்ட்' செய்வது என பல்வேறு சேவைகள் இம்மையத்தில் கிடைக்கிறது.
அரசு துறை பணிகள் 'ஆன் லைன்' மயமாகி விட்டதால், பொது சேவை மையங்களை மட்டுமே பொதுமக்கள் சார்ந்திருக்கின்றனர். கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் மட்டும் இருந்த பொது சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ், பட்டா மாறுதலுக்கு தவம் இருந்த நிலை மாறி, பொதுசேவை மையத்திலேயே, பதிவு செய்து, சான்று பெறும் வசதி வந்து விட்டது.
இதையடுத்து, ஊராட்சிகள் தோறும் சேவை மையங்கள் அமைத்து மக்களின் அலைச்சலை குறைக்க வேண்டும் என்று மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி, தலா, ரூ.17 லட்சம் மதிப்பீட்டில், 3 பெரிய அறைகளுடன், கிராம சேவை மையம் கட்டப்பட்டது. மகளிர் குழுவினருக்கு முறையான பயிற்சி அளித்து, கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதியை பெற்று, பொதுசேவை மையங்களை நிறுவ அரசு திட்டமிட்டது. ஆனாலும், கிராம சேவை மைய கட்டிடங்கள் கட்டி முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 240 ஊராட்சிகளில், ரூ.40 கோடி மதிப்பீட்டில் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஒரு கட்டிடமும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், மக்களின் வரிப்பணம் வீணாவதோடு அரசின் சேவையும் தடைபடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பூட்டிக்கிடக்கும் இ-சேவை மையங்கள் குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'நாங்கள் விவசாயம் செய்கிறோம். பெரும்பாலும் படிக்காதவர்கள்தான். எங்களது சிரமத்தை குறைக்கவே கிராம சேவை மைய கட்டிடம் கட்டினார்கள். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் பூட்டியே கிடக்கிறது. இதையொட்டி, இந்த கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், இலவசமாக மது அருந்தும் பாராகவும் மாறிவிட்டது. சில கிராமங்களில் ஜன்னல்களை கூட சிலர் பெயர்த்து எடுத்து சென்றுவிட்டனர். எனவே, சேவை மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்' என்றனர்.