
Top 5 Vijay TV Serials : சின்னத்திரையில் சன் டிவிக்கு நிகராக விஜய் டிவியும் போட்டிபோட்டு புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இளைஞர்களையும் கவரும் வண்ணம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கான டிஆர்பி ரேட்டிங்கும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 23வது வாரத்திற்கான டாப் 5 விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் எந்தெந்த சீரியல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
பிரவீன் பென்னட் இயக்கத்தில் லட்சுமி பிரியா நடித்து வரும் மகாநதி சீரியல் இந்த வாரம் டாப் 5 சீரியல்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 6.1 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அடுத்ததாக நான்காம் இடத்தை சின்ன மருமகள் சீரியல் தட்டிச் சென்றுள்ளது. நவீன் நாயகனாக நடிக்கும் இந்த சீரியல், 6.6 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. முதல் மூன்று இடங்களையும் விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்கள் தான் பிடித்திருக்கின்றன.
அந்த வகையில் மூன்றாம் இடத்தில் ஸ்டாலின் மற்றும் நிரோஷா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 8.1 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அதேபோல் அண்மையில் புதிதாக தொடங்கப்பட்ட அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. நேரம் மாற்றத்துக்கு பின்னர் சக்கைப்போடு போட்டு வரும் அய்யனார் துணை சீரியலுக்கு 8.2 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
வழக்கம் போல் சிறகடிக்க ஆசை சீரியல் தான் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. வெற்றி வசந்த், கோமதி பிரியா, சுந்தர்ராஜன், அனிலா ஆகியோர் நடிப்பில் தினந்தோறும் இரவும் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 8.6 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சிந்து பைரவி சீரியலும் இந்த வாரம் டிஆர்பி ரேஸில் பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளி 5.5 டிஆர்பி ரேட்டிங் உடன் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.