
சின்னத்திரை சீரியல்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகள் குறித்து தெரிந்து கொள்வதற்கு ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக திரை பிரபலங்களை சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்தும் வருகின்றனர். அதேபோல் தங்களுக்கு என்ன நடந்தாலும் அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை நடிகர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த சபரிநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
‘வேலைக்காரன்’, ‘பாரதி கண்ணம்மா’ போன்ற சீரியல்களின் மூலமாக பிரபலமானவர் நடிகர் சபரிநாதன். இவர் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவுக்கு வந்த ‘பொன்னி’ சீரியலில் வைஷ்ணவிக்கு ஜோடியாக நடித்து வந்தார். மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரோஸ்ட் செய்யும் ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அவருக்கு என்ன ஆனது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் அளித்து பதிவிட்டுள்ள அவர், “என்னுடைய உடல் நலம் குறித்து நிறைய கேள்விகள் வருகிறது. நான் நலமாக இருக்கிறேன். உறுதியாக திரும்பி வருவேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு என்னால் உங்கள் மெசேஜ்களுக்கு பதிலளிக்க முடியாது. என்னை மன்னியுங்கள். உங்களுடைய பிரார்த்தனைகள் தேவை” என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், அவருடன் நடித்த திரைப் பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற்று வர வேண்டும் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.