
அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ஆதரவை பெற்ற, தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி துவங்குவதற்கான பணிகள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டது. அதே போல் உலக நாயகன் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஷூட்டையும் முடித்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், எப்போது நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்பதில் மட்டும் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.
காரணம், 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து... கமல்ஹாசன் நடிகராக மட்டும் இன்றி, தயாரிப்பாளராகவும், பிசியாகி உள்ளார். அதே போல் தன்னுடைய அரசியல் பணியிலும் தீவிரம் காட்டி
வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை கமல்ஹாசன் எதிர்கொள்வார் என்கிற தகவல்களும் ஒரு பக்கம் பரபரத்துக்கொண்டுள்ளது.
எனவே... இந்த மாதம் துவங்க இருந்த பிக்பாஸ், அடுத்த மாதத்திற்கு தள்ளி போனது. மேலும் இந்த முறை, 2 பிக்பாஸ் வீடுகளில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என்பது பற்றிய தகவலை, உலக நாயகனின் புதிய புரோமோவை வெளியிட்டு விஜய் டிவி தரப்பு உறுதி செய்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 1ஆம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல், பிக்பாஸ் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.