இதுவரை தனித்தனியாக இயங்கி வந்த ஜியோ சினிமாவும், டிஸ்னி ஹாட் ஸ்டார் இரண்டும் தற்போது ஒன்றாக இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய ஓடிடி தளத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு இன்று புதிய ஓடிடி ஆப்பாக உருவாக்கி உள்ளனர்.
டில்லி : ஜியோ சினிமாஸ் மற்றும் டிஸ்னி ஹாட் இணைந்து இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய ஓடிடி தளத்தை உருவாக்கி உள்ளது. இதை விட ஆச்சரியம் இதன் சப்ஸ்கிரைப் ரேட் தான்.
வந்தாச்சு ஜியோ ஹாட்ஸ்டார் :
ஜியோ நிறுவனத்தின் ஜியோ சினிமாஸ் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இரண்டுமே இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களாக இருந்து வந்தன. இந்த இரண்டு நிறுவனங்களுக்குமே இந்தியாவில் சப்ஸ்க்ரைபர்கள் அதிகம். சினிமா மற்றும் ஓடிடி ரசிகர்களை அதிகம் கவருவதற்காக இந்த இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பல நிகழ்ச்சிகளையும், அதிரடி ஆஃபரான பிளான்களையும் அறிவித்து வந்தன. சமீபத்தில் வியாகாம்18 மற்றும் ஸ்டார் இந்தியா ஆகிய இரண்டு நிறவனங்களும் இணைந்து ஜியோ ஸ்டார் என்ற அமைப்பை உருவாக்கின. இந்நிலையில் ஜியோ ஸ்டார் நிறுவனம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய ஓடிடி தளத்தை உருவாக்கி உள்ளது. பிப்ரவரி 14ம் தேதியான இன்று காலை, காதலர் தின ஸ்பெஷலாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் திட்டம் :
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார் இணைந்து விளையாட்டுக்கள், சினிமாக்கள், பொழுதுபோக்குகள், வெப் சீரிஸ், சர்வதேச படங்கள், இந்திய படங்கள் என பல்வேறு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கி, ஓடிடி ரசிகர்களை பெரிதும் கவருவதற்காக இந்த தளத்தை உருவாக்கி உள்ளன. கிட்டதட்ட 3 லட்சம் மணி நேரம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி, 50 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கவர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் அறிமுக விழாவில் பேசிய ஜியோ ஸ்டார் டிஜிட்டல் சிஇஓ கிரண் மணி, இந்தியர்கள் அனைவருக்கும் உண்மையான, தனித்துவமான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவதற்காக ஆற்றல் நிறைந்த நோக்கத்துடன் ஜியோ ஹாட்ஸ்டார் உருவாக்கப்பட்டுள்ளது. சாத்தியமில்லாததை முடிவில்லாத சாத்தியமாக்கும் வாக்குறுதியுடன் இதை அறிமுகம் செய்கிறோம். 19 மொழிகளில் இதுவரை எவரும் வழங்காத வகையில் பல ஆஃபர்கள், நிகழ்ச்சிகளை இதில் வழங்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் கட்டணம் :
ஏற்கனவே டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமாஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அந்த தளங்களை அப்டேட் செய்தாலே போதும். தானாக அது ஜியோ ஹாட்ஸ்டாராக மாறி விடும். அவர்கள் தங்களின் சந்தா காலம் முடியும் வரை கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதே சமயம் புதிதாக ஜியோ ஹாட்ஸ்டாரை சப்ஸ்கிரைப் செய்பவர்கள் ரூ.149 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரை பார்த்து மகிழலாம். ஆனால் விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் போது பணம் செலுத்தினால் மட்டுமே கிரிக்கெட் போட்டிக்ளை பார்க்க முடியும் என்ற திட்டத்தை கொண்டு வர ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஹாட்ஸ்டார் கை மாற காரணம்:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் டிஸ்னி ஹாட்ஸ்டார் கையை விட்டு போனதில் இருந்தே அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் தான் ஜியோவுடன் கைகோர்க்கும் முடிவை ஹாட்ஸ்டார் எடுத்தது. தற்போது வரை ஜியோ ஹாட்ஸ்டார் பயன்படுத்துவதற்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டும் என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. யார் வேண்டுமானாலும் ஜியோ ஹாட்ஸ்டாரை பயன்படுத்தலாம். ஆனால் சப்ஸ்கிரைப் செய்பவர்கள் மட்டுமே விளம்பரம் இல்லாமல் இந்த ஓடிடி தளத்தை பயன்படுத்த முடியும். மற்றவர்கள் விளம்பரத்துடன் மட்டுமே பார்க்க முடியும்.