யமஹா நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யமஹா நிறுவனம் விற்பனையாளர்கள் மட்டும் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் தனது நியோஸ் மற்றும் E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை காட்சிப்படுத்தி இருக்கிறது. இரு மாடல்களும் யமஹா எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக யமஹா நியோஸ் மாடல் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 3 ஆயிரத்து 005 இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 52 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. யமஹா நியோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 2.03 கிலோவாட் மோட்டார் மற்றும் இரண்டு லித்தியம் அயன் பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளது. இவை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்குகின்றன.
யமஹா நியோஸ் அம்சங்கள்:
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் ஆகும். இதில் உள்ள பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும். யமஹா நியோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்.இ.டி. லைட்கள், ஒட்டுமொத்தமாக வித்தியாசமான டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் அம்சங்கள் மற்றும் தோற்றத்தின் படி யமஹா நியோஸ் 50சிசி திறன் கொண்ட பெட்ரோல் இருசக்கர வாகனத்திற்கு இணையானது என கூற முடியும்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் யமஹா நியோஸ் மாடல் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா மற்றும் ஆம்பியர் மேக்னஸ் போன்ற மாடல்களுக்கு இணையானது என கூறலாம். எனினும், அம்சங்கள் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விலை சற்று அதிகம் தான்.
யமஹா E01 அம்சங்கள்:
யமஹா E01 மாடல் தற்போது ஜப்பானில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இது அனுமதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே லீஸ் முறையில் வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக விலை கொடுத்து வாங்கும் வகையில் விற்பனை செய்யப்படுவதில்லை. யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் அசத்தலான மேக்சி ஸ்கூட்டர் போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் ஏற்கனவே பல்வேறு ஆட்டோ விழாக்களில் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த மாடலில் 8.1 கிலோவாட் மோட்டார் மற்றும் 104 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை குயிக் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஒரு மணி நேரமே போதுமானது. வழக்கமான சார்ஜர் பயன்படுத்தும் போது ஸ்கூட்டரை ஐந்து மணி நேரத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். இந்த ஸ்கூட்டரில் சார்ஜிங் போர்ட் முன்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்திய வெளியீடு:
யமஹா நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எனினும், தற்போது காட்சிக்கு வைக்கப்பட்ட இரு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என்றே தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் யமஹா நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.