எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என்று பெயரை மாற்றியது உள்பட பல மாற்றங்களைச் செய்ததன் எதிரொலியாக அந்நிறுவனத்தின் மதிப்பு பாதிக்கும் கீழ் சரிந்துவிட்டது.
முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ், ஒரு வருடத்திற்கு முன்பு எலோன் மஸ்க் அதனை வாங்கும்போது இருந்த மதிப்பைவிட பாதிக்கும் குறைவான மதிப்புக்கு வீழ்ச்ச அடைந்துள்ளது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகள் மதிப்பு 19 பில்லியன் டாலராக உள்ளது என்று அந்நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாராத்தில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஒரு பங்கின் மதிப்பு சுமார் 45 டாலராக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கிய நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு அதில் பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது.
எலான் மஸ்க் கையகப்படுத்தப்பட்டதில் இருந்து, ட்விட்டரின் பெரும்பாலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பலர் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து எலான் மஸ்க் நிறுவனத்தின் பெயரை X என்று மாற்றி, அதை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். இதனால் நிறுவனத்தின் விளம்பர வருவாயில் பாதிக்கும் மேல் இழக்க நேர்ந்திருக்கிறது.
ஃபார்ச்சூன் நிறுவனத்தின் முந்தைய மதிப்பீட்டின்படி, எலான் மஸ்கின் வசம் சென்றதும் நிறுவனத்தின் நிதி நிலையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரிகிறது. ட்விட்டர் அவரால் கையகப்படுத்தப்பட்ட நேரத்தில், கடன் மற்றும் பங்குகளின் அடிப்படையில் அதன் மதிப்பு 44 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது.
மஸ்க் நிறுவனத்தை வாங்கியதும் 13 பில்லியன் டாலர் கடனில் சிக்கியது. காலப்போக்கில் அவரது எடக்கு மடக்கான முடிவுகளால் விளம்பரதாரர்களிடம் இருந்து கிடைத்துவந்த வருவாயில் 60 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது. எக்ஸ் அதன் கடனுக்காக வருடத்திற்கு சுமார் 1.2 பில்லியன் டாலர் வட்டி செலுத்தவேண்டியுள்ளது என ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது.
எக்ஸ் நிறுவனம் விளம்பரதாரர்களை கவர்வதற்குப் பதிலாக, பிரீமியம் சேவைக்கு சந்தா செலுத்தும் பயனர்களை உருவாக்குவதற்காக அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் இதுவரை மாதாந்திர பிரீமியம் சேவைக்கு 1 சதவீதத்துக்கும் குறைவான பயனர்களே சந்தா செலுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய் 120 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே இருக்கிறது என்றும் ப்ளூம்பெர்க் சொல்கிறது.
ஷாப்பிங், பேமெண்ட் போன்ற புதிய அம்சங்களையும் கொண்டுவந்து வருவாயைப் பெருக்குவது குறித்தும் எலான் மஸ்க் பேசியிருக்கிறார். அதன்படி, இந்த மாத தொடக்கத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி அறிமுகமானது. இது பீட்டா வெர்ஷனில் சோதனையில் உள்ளது.