ஆப்பிள் மேக் லாப்டாப் மூலம் கிடைக்கும் வருவாய் மீண்டும் சரியத் தொடங்கியது. M3 சிப் வெளியீடு இந்தப் பின்னடைவில் இருந்து மீண்டுவர உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது.
ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியாவில் திங்கட்கிழமை நடைபெற்ற ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் புதிய ஐமேக், லேப்டாப் மற்றும் மூன்றாம் தலைமுறை மேக் பிராசஸர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் கிராபிக்ஸில் பெரிய மேம்பாடுகளுடன் M3 சிப் வெளியாகியுள்ளது.
புதிய சிப் மேம்பட்ட 3 நானோமீட்டர் உற்பத்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் அம்சத்திலும் இந்த சிப் மேலும் சிறப்பாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் சொல்கிறது. இந்த M3 சிப்பின் பேசிக் மாடலில் எட்டு கோர்கள் கொண்ட பிராசஸிங் எஞ்சின் மற்றும் 10 கோர்கள் கொண்ட கிராபிக்ஸ் இருக்கிறது.
M3 ப்ரோ சிப்பின் மற்றொரு மாடலில் பிராசஸிங் எஞ்சின் 12 கோர்களைக் கொண்டுள்ளது. கிராபிக்ஸுக்கு 18 கோர்கள் உள்ளன. M3 மேக்ஸில் 16 கோர் பிராசஸிங் எஞ்சினும் 40 கோர் கிராபிக்ஸும் உள்ளன. இது 2021ஆம் ஆண்டு வெளியான M1 சிப்பை விட 80% வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் வெளியிடப்பட்ட புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் இந்த M3 பிராசஸர்கள் இருக்கும். இந்த லேப்டாப்பில் உள்ள பேட்டரி 22 மணிநேரம் தாக்கப்பிடிக்கும் உத்தரவாதம் கொண்டது. இத்துடன் ஆப்பிள் 24 இன்ச் ஆல் இன் ஒன் ஐமேக் மாடலையும் M3 சிப்புடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டில் இன்டெல் செமி கண்டக்டர்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தனது சொந்த செமி கண்டக்டர்களை பயன்படுத்தத் தொடங்கியது. ஆப்பிள் சிலிக்கான் என்ற பெயரில் தனது சொந்த செமி கண்டர்க்டர் உற்பத்தியையும் ஆரம்பித்தது. அதிலிருந்து ஆப்பிள் மேக் லேப்டாப்களின் விற்பனை வேகமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதனால், கோவிட்-19 தொற்று காலத்தில் செலவினங்களில் ஏற்பட்ட சவாலையும் சமாளிக்க முடிந்திருக்கிறது.
ஆனால் சமீபத்திய காலாண்டுகளில் போட்டி தீவிரமடைந்துள்ளதால், ஆப்பிள் மேக் லாப்டாப் மூலம் கிடைக்கும் வருவாய் மீண்டும் சரியத் தொடங்கியது. M3 சிப் வெளியீடு இந்தப் பின்னடைவில் இருந்து மீண்டுவர உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது.
இந்த மாதம் தொடங்கிய நிதியாண்டில் மேக் விற்பனையில் கிடைத்த வருவாய் 5.5% வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த காலாண்டில் மேக் விற்பனை சுமார் 5 சதவீதம் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.