அமேசான் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருப்பதாக நம்ப வைத்து ரூ.3.15 லட்சத்தை நூதன மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்படி என்ன நடந்தது, மேலும், அதே போல் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து இங்கே காணலாம்.
இணையவழி குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன, குறிப்பாக ஆன்லைன் வேலை மோசடிகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில், தற்போது அமேசான் நிறுவனத்தில் வேலை பெறும் ஆசையில் ஒரு பெண் ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார். இதேபோல், கடந்த ஐந்து மாதங்களில் 100 க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கிடைத்த செய்திகளின்படி, கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு சர்வதேச எண்ணிலிருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு பணியாளர்களைத் தேர்வுசெய்யும் அதிகாரி என்று அறிமுகம் செய்துகொண்டார். naukri.com மற்றும் Shine.com போன்ற வேலைவாய்ப்பு விவரங்களை வழங்கும் இணையதளங்களில் இருந்து அந்த பெண்ணின் எண் பெற்றதாகவும் கூறிக் கொண்டார்.
மேலும், சில மென்பொருள் மூலம் போலியான அமேசான் தளத்தை உருவாக்கி, அதில் இருந்து மோசடி நபர் சில மெசேஜ்களை அனுப்பியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய கார்த்திகா தொடர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், நேர்காணல் போல் நடத்தி, வேலை உங்களுக்கு உறுதியாகிவிட்டது என்றும் கூறியுள்ளார். அதன்பிறகு தான் ஆட்டம் ஆரம்பமானது.
வேலையில் சேர்ந்துவிட்டதாக நம்ப வைத்து, அமேசான் தளத்தில் பேமெண்ட் செய்யும் முறையை மாற்றும் வகையில் ஒரு வாலெட் புரோகிராமை உருவாக்கச் சொல்லியுள்ளனர். அதையும் கார்த்திகா செய்து காண்பித்துள்ளார். மேற்கொண்டு, அது நன்றாக வேலைசெய்கிறதா என்று பார்ப்பதற்காக பணம் போடும்படி கூறியுள்ளனர். இதனை நம்பி அந்த பெண்ணும் 3 லட்சம் ரூபாயை போட்டுள்ளார். அவ்வளவு தான், அந்த பணத்தை அப்படியே எடுத்துவிட்டு மோசடி கும்பல் சென்று விட்டது. சிறிது நேரத்திற்கு பிறகே கார்த்திகா ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பின்னர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
மோசடி பணம் பல்வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் டெல்லி போலீஸ் 4 பேரை கைது செய்தனர். இந்த ஒரே நூதனமுறையில் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டிருப்பதும், மொத்தம் 3.5 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ShareChat நிறுவனத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள்பணிநீக்கம்! கேமிங் தளத்தையும் இழுத்து மூடியது!
ஆன்லைன் வேலை மோசடி: பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- ஒரு வேலையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை எப்படி நடைபெறுகிறதுஎன்பதை அறிந்திருப்பது முக்கியம். அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில்சார்ந்த முறையில் ஒரு செய்தியை அனுப்பவோ அல்லது வழக்கத்திற்கு மாறான விஷயங்களைச் செய்யும்படி கேட்கவோ மாட்டார்கள்.
நீங்கள் போலி வேலைவாய்ப்பில் விழுந்தாலும், பணியமர்த்துவதற்கான செயல்முறை மிகநீண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பல நேர்காணல்களுக்குச் செல்ல வேண்டும் அல்லது நிறைய விஷயங்களுக்கு HR உடன் பேச வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆட்சேர்ப்பு நடவடிக்கை எப்படி நடைபெறுகிறது என்பது தெரியும்.
-ஆட்சேர்ப்பு நடவடிக்கை மின்னஞ்சலில் தான் பெரும்பாலும் நடைபெறும். போன் கால் அல்லது WhatsApp அல்லது SMS இல் நடைபெறாது. லிங்க்ட்இன் இணையதளத்தில் உள்ள HR அல்லது பணியாளர்களின் பெயரை இருமுறை சரிபார்க்கலாம்.
-எந்தக் காரணத்திற்காகவும் பணத்தை கொடுக்குமாறு ஒரு நிறுவனம் உங்களை ஒருபோதும் கேட்காது.