நிதி அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனங்களின் இணையதளங்களை (URL) முடக்கியுள்ளது.
Binance, Kucoin, OKX போன்ற சில புகழ்பெற்ற உலகளாவிய கிரிப்டோகரன்சி இணையதளங்கள் வெள்ளிக்கிழமை முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பணமோசடி சட்டங்களுக்கு இணங்காததற்காக இந்த கிரிப்டோகரன்சி தளங்களுக்கு மத்திய அரசு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி, இந்தியாவில் சட்டவிரோதமாகச் செயல்பட்டதற்காக Binance, Kucoin, Houbi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global மற்றும் Bitfinex ஆகிய நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிறுவனங்கள் உள்நாட்டு வரி விதிகளை பின்பற்றத் தவறியதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியானது.
இதன் விளைவாக, நிதி அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனங்களின் இணையதளங்களை (URL) முடக்கியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தடம் பதிக்கும்: எலான் மஸ்க் உறுதி
"Binance உட்பட பல கிரிப்டோ நிறுவனங்களை பாதிக்கும் ஐபி பிளாக் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். இது இந்திய iOS ஆப் ஸ்டோர் அல்லது இந்தியாவில் இருந்து Binance இணையதளத்தை அணுக முயற்சிக்கும் பயனர்களை மட்டுமே பாதிக்கும். ஏற்கனவே Binance செயலியை வைத்திருக்கும் பயனர்கள் பாதிக்கப்படவில்லை" என்று Binance நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் கூறியுள்ளது.
"உள்நாட்டு விதிமுறைகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதே நேரம் பயனர் பாதுகாப்பையும் ஆரோக்கியமான Web3 தொழில் வளர்ச்சியையும் உறுதி செய்வதற்காக அரசுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து Binance மற்றும் Kucoin உள்ளிட்ட சில உலகப் புகழ்பெற்ற கிரிப்டோகரன்சி செயலிகள் அகற்றப்பட்டன என்பதும் நினைவூட்டத்தக்கது.
உலகின் மதிப்புமிக்க நிறுவனம் மைக்ரோசாப்ட்! ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம்!