உபெர் இந்தியா தலைமை செயல் அதிகாரி பிரப்ஜோத் சிங் ஒரு நாள் முழுக்க உபெர் ஓட்டுனராக பணியாற்றினார்.
உபெர் இந்தியா தலைமை செயல் அதிகாரியான பிரப்ஜோத் சிங் உபெர் டாக்சியின் ஓட்டுனராக ஒரு நாள் முழுக்க பணியாற்றி இருக்கிறார். வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ளும் வகையில், ஓட்டுனராக பணியாற்றினார். டெல்லி மற்றும் குருகிராம் பகுதிகளில் பிரப்ஜோத் சிங் சில வாடிக்கையாளர்களுக்கு ஓட்டுனராக பணியாற்றினார்.
உபெர் லோகோ இடம்பெற்றுள்ள மாருதி சுசுகி டிசையர் மாடலை பிரப்ஜோத் சிங் ஓட்டினார். வழக்கமாக வாடிக்கையாளர்களின் முகவரியை உறுதிப்படுத்திக் கொள்ள ஓட்டுனர்கள் அவர்களுக்கு அழைப்பை மேற்கொள்வர். எனினும், பிரப்ஜோத் சிங் இவ்வாறு செய்யாமல், நேரடியாக வாடிக்கையாளர் பயணத்தை உறுதிப்படுத்திக் கொண்டு நேரடியாக அங்கு சென்றுள்ளார். பின் சவாரி முடியும் தருவாயில் தான் உபெர் தலைமை செயல் அதிகாரி என வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
சில வாடிக்கையாளர்கள் தலைமை செயல் அதிகாரியின் செயலை பார்த்து வியப்படைந்தனர். சிலர் தங்களின் அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிலர் பிரப்ஜோத் சிங் கூறியதை நம்பாமல், உபெர் தலைமை செயல் அதிகாரி குறித்து கூகுள் தேடல் செய்து பின் அவர் கூறியதை நம்பினர். சிலர் பிரப்ஜோத் சிங்குடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனனர்.
உபெர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை துவக்கம் முதல் அறிந்து கொள்ளவே பிரப்ஜோத் சிங் இவ்வாறு செய்தார். ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதாக கூறினாலும், நிஜத்தில் கள சூழலி வேறாகவே அமைந்து விடுகிறது. சமயங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் குறைபாடு அல்லது கூடுதல் கட்டணம் வசூலித்தல் போன்ற பிரச்சினைகள் இதுபோன்ற சேவைகளில் எழுந்துள்ளன.
இந்தியாவில் தலைமை நிர்வாக அளவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் மிகவும் ஆரம்பகட்ட பணியை செய்வது அரிதான காரியமாகவே இருக்கிறது. பிரப்ஜோத் சிங் மேற்கொண்ட இந்த செயல் இணையத்தில் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.