உலகிலேயே இந்தியாவில் தான் வாட்ஸ்அப் மூலமே உபர் கேப் புக் செய்யும் வசதியை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளார்கள்.
இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக இருந்து வருகிறது வாட்ஸ்அப். வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், தற்போது வாட்ஸ் அப் நிறுவனம், உபர் நிறுவனத்துடன் இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி வாட்ஸ் அப் மூலமாகவே உபர் கேப்களை புக் செய்து பயணிக்கலாம். உபர் செயலி இல்லாதவர்கள் கூட வாட்ஸ் அப் மூலம் உபர் கேப்களை புக் செய்து பயணிக்கலாம்.
இது வழக்கமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வதை போன்று ஈஸியான நடைமுறை என கூறப்படுகிறது. வாட்ஸ் அப் சாட் மூலமாகவே தங்களுடைய பிக் அப் லொகேஷன், டிராப் லொகேஷன் உள்ளிட்டவற்றை அனுப்பினால் போதுமாம், அதுவே கேப் இருப்பை பொருத்து அதன் விவரங்களை அனுப்பிவிடுமாம். வழக்கமாக உபர் ஆப்பில் செய்யும் இந்த நடைமுறைகளை இனி வாட்ஸ் அப் மூலமே செய்து விடலாம்.
உலகிலேயே இந்தியாவில் தான் இந்த வசதியை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளார்கள். முதற்கட்டமாக லக்னோவில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. படிப்படியாக மற்ற நகரங்களிலும் விரைவில் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். விரைவில் மற்ற மொழிகளும் சேர்க்கப்பட உள்ளதாம்.