டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நேற்று நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற மறு நாளிலேயே அவர் டுவிட்டரில் அதிரடியான மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்றத் தளமாகவும் டுவிட்டர் செயல்பட்டு வருகிறது. இந்தத் தளத்தில் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதால், டுவிட்டர் நிறுவனம் தனது பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி பயனர்களின் தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வெளியிட ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், தற்போது தனி நபரின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ அவர்களின் ஒப்புதல் இன்றி பகிர்வதை தடுக்கும் விதமாக புது விதிமுறையை அந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி உள்ளது.
அந்நிறுவனத்தின் புது விதிகளின்படி பயனர்கள் தங்களின் புகைப்படங்களோ அல்லது வீடியோவோ யாரேனும் அனுமதியின்றி வெளியிட்டதாக புகார் அளிக்கும் பட்சத்தில் அந்த புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் டுவிட்டரில் இருந்து அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நேற்று நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற மறு நாளிலேயே அவர் டுவிட்டரில் அதிரடியான மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.