டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து அடுத்தடுத்து சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இம்முறை டுவிட்டர் அலுவலக கட்டிடத்தில் வாடகை பாக்கி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
பிரபல முதலீட்டாளரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். அவர் டுவிட்டர் கைப்பற்றியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தனர். குறிப்பாக ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைத்தார், அனைவருக்கும் ப்ளூ டிக் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கட்டண சந்தாவை அறிமுகம் செய்தார். டுவிட்டரை மேம்படுத்துகிறேன் என்ற பெயரில், பணியாளர்களை மன அழுத்தத்திற்கும், பணி சுமைக்கும் உள்ளாக்கினார்.
இதனால் டுவிட்டரில் இருந்து பல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர், பல ஊழியர்கள் எலான் மஸ்க்கின் கிடுக்குபிடி தாங்காமல், தாமாக முன்வந்து ராஜினாமா செய்தனர். இதனால் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. டுவிட்டரில் விளம்பரதாரர்களின் பங்குகள் குறைந்தன. தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாதததால், டுவிட்டர் முக்கிய உட்செயலாக்க பிரிவுகள் முடங்கின. போலி கணக்குகள் ப்ளூ டிக் பெற்றன. இவை அனைத்தையும் சரிசெய்யும் பணிகள் தற்போது முழுமுயற்சியில் நடந்து வருகிறது.
Telegram Update: படம் வரையலாம், ஃப்ரொபைல் பிக்சர் மாத்தலாம்!
இந்த நிலையில், உலகளாவிய டுவிட்டர் அலுவலகங்களுக்கான வாடகை தொகை பாக்கி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக சிவிக் சென்டர் பகுதியில் உள்ள சான் பிரான்சிஸ்கோ தலைமையகம் இதில் அடங்கும். சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்திற்கு வாடகை பாக்கி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டுள்ளதால், டுவிட்டருக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, ட்விட்டர் நிறுவனம் $136,260 (தோராயமாக ரூ. 1.12 கோடி) வாடகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த வாடகை பாக்கி வைத்துள்ள அலுவலகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டு கிடக்கின்றன, அங்குள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இதேபோல், ஜெட் சர்வீசஸ் குரூப் எல்எல்சி நிறுவனத்தின் தரப்பில் டுவிட்டருக்கு எதிராக மற்றொரு வழக்கும் போடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு சார்ட்டர் விமானங்களுக்கு வாடகை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தொகையின் மதிப்பு $197,725 (சுமார் ரூ. 1.63 கோடி) ஆகும். கடந்த மாதம் நியூ ஹாம்ப்ஷயர் மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.