திருச்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருச்சி டேலண்ட்ஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வேலைதேடும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பும், அதற்கான பயிற்சி வகுப்புகளையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள், திறன் வளர்ப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இளைஞர்களுக்காகவே ‘திருச்சி டேலண்ட்ஸ்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயிலியை அமைச்சா்கள் நேரு, மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் அறிமுகம் செய்து வைத்தனா். இது குறித்து திருச்சிமாவட்ட கலெக்டர் பிரதீப்குமாா் கூறியதாவது, ‘திருச்சியில் சமீபத்தில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 27 ஆயிரம் பணிகளுக்கு ஆட்கள் தேவையாக இருந்தது. அப்படி இருந்தும், வெறும் 900 போ் மட்டுமே பணியில் சோ்க்கப்பட்டனா். இதில் இருந்து இளைஞர்கள் பலருக்கும் இன்னும் கூடுதல் திறன்கள், தகுதிகள் தேவைப்படுகிறது என்பது தெரிகிறது.
குறிப்பாக இப்போதுள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு வெளிமாவட்டங்கள் அல்லது, வெளியூா்களுக்குச் சென்று வேலை செய்யும் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். இதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான பணியிடங்கள் பூா்த்தி செய்யப்படவில்லை.எனவே அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளை தெரியப்படுத்தும் வகையில் ‘திருச்சி டேலண்ட்ஸ்’ என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளோம்.
இந்த செயிலியின் மூலம் திருச்சியில் உள்ள 2,500 உற்பத்தி நிறுவனங்கள் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். ஹோட்டல், சிறு வணிக, பெரு வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், ஷாப்பிங் சென்டர்கள் என அனைத்து விதமான பணியிடங்களும் இதில் உள்ளன. வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் அந்தந்த வணிகநிறுவனங்கள் இந்த ஆப்பின் மூலம் தகுதியானவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
தன்னார்வலர்கள் மூலம் மாவட்டத்தின் எந்தப் பகுதியில் ஆட்கள் தேவை என்றாலும் இந்த ஆப் வாயிலாகத் தெரியப்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை விண்ணப்பதாரர்களுக்கு போதுமான தகுதிகள் இல்லாவிட்டால் கூட, அதற்கான தகுதியை வளா்த்துக் கொள்ள மெய்நிகர் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து பணியமா்த்தப்படுவா். இந்த முயற்சியை நடைமுறைப்படுத்தும் வகையில் திருச்சியில் உள்ள 404 ஊராட்சிகளிலும் தலா 2 போ் வீதம் 808 தன்னாா்வலா்கள் நியமிக்கப்படுவர்.
ஏர்டெலில் புதிதாக 2 ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம்!
மேலும், ஊராட்சி நூலகங்களில் உள்ள கம்ப்யூட்டர், வெப் கேமரா வசதியைப் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக திருச்சி டேலண்ட்ஸ் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், இந்த செயலியானது வேலைக்கு ஆட்கள் தேடுவோரையும், வேலைவாய்ப்பு தேடுவோரையும் இணைக்கும் பாலமாக செயல்படும். இதற்கு உறுதுணையாக தன்னாா்வலா்கள் செயல்படுவா்.
திருச்சியில் சுமார் 2,500 நிறுவனங்கள் உள்ளன, இவற்றில் ஆண்டுதோறும் 10 சதவீதம் பேரை பழகுநா் பணியில் அமா்த்தி பயிற்சி வழங்க வேண்டியது கட்டாயம். இவ்வாறு பழகுநா் பயிற்சிக்கு வழங்கப்படும் ஊதியத்தில் சுமார் 50 சதவீதத்தை அரசே வழங்குகிறது. எனவே ஒவ்வொரு நிறுவனமும் வேலைப் பழகுநா் பயிற்சி வழங்குவதை உறுதி செய்யவும், அந்த பயிற்சி முடித்தவா்களுக்கு வேலை கிடைத்திடவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.