Toyota Innova EV : இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் - ரேன்ஜ் எவ்வளவு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Mar 31, 2022, 10:47 AM IST

Toyota Innova EV: டொயோட்டா இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலில் புதிய அலாய் வீல்கள், பக்கவாட்டில் புளூ நிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.


டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா இ.வி. கான்செப்ட் மாடலை இந்தோனேசியா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா புதிய தலைமுறை மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வந்த மாடலை விட புதிய இ.வி. கான்செப்ட் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

டொயோட்டா இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் தோற்றத்தில் தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், முன்புறம் கிரில் அளவு சிறியதாக்கப்பட்டு எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான தோற்றம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

டிசைன்:

இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலில் புதிய முன்புற பம்ப்பர், செங்குத்தான ஃபாக் லேம்ப் ஹவுசிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டு பகுதிகள் தற்போதைய இன்னோவா க்ரிஸ்டா மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலில் புதிய அலாய் வீல்கள், பக்கவாட்டில் புளூ நிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த காரின் குவாட்டர் பேனலின் கீழ் இன்னோவா இ.வி. பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் எலெக்ட்ரிக் பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரின் பின்புற இடதுபுறத்தில் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

இண்டீரியர்:

டொயோட்டா இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலின் உள்புறம் அதன் ஐ.சி. மாடலை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் தொடுதிரை வசதி கொண்ட இண்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3-ஸ்போக் மல்டி-ஃபன்ஷனல் ஸ்டீரிங் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறத்திலும் எலெக்ட்ரிக் ஃபீல் கிடைக்கும் வகையில் புளூ நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

பேட்டரி மற்றும் ரேன்ஜ்:

புதிய இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கான்செப்ட் மாடல் என்பதால் இதன் பேட்டரி, சார்ஜிங் மற்றும் ரேன்ஜ் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி இன்னோவா எலெக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு அறிமுகமாகும் போது முழு சார்ஜ் செய்தால் சுமார் 300 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் முழுமையான எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் உற்பத்தி, இந்திய வெளியீடு பற்றிய தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், முதற்கட்டமாக இந்த சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன் பின் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!