புதிய விதிமுறை காரணமாக கார் மாடல்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேதமும் இருக்க முடியாது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களிலும் கட்டாயம் ஆறு ஏர்பேக் வசதி வழங்கப்பட வேண்டும் என்ற புது விதிமுறை அமலுக்கு வர இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய விதிமுறை அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்.
கார்களில் சரியான ஏர்பேக் வழங்கப்பட்டு இருந்தால் 2020 ஆண்டில் மட்டும் சுமார் 13 ஆயிரத்து 022 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். முன்னதாக ஜனவரி மாத வாக்கில் எட்டு பேர் வரை பயணம் செய்யக்கூடிய வாகனங்களில் ஆறு ஏர்பேக் நிச்சயம் இருக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.
M1 ரக வாகனங்கள்:
இந்த உத்தரவு M1 பிரிவு வாகனங்கள் அதாவது எட்டு பேர் வரை பயணிக்கக்கூடியவை மற்றும் 3.5 டன்களுக்கும் குறைந்த எடை மாடல்களுக்கு பொருந்தும். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களில் முன்புறம் இரண்டு ஏர்பேக், இரண்டு கர்டெயின் ஏர்பேக் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். டிரைவர் சீட் சேர்த்து எட்டு பேர் வரை பயணிக்கக்கூடிய வாகனங்கள் M1 பிரிவை சேர்ந்தது குறிப்பிடப்படுகிறது.
இந்த பிரிவில் எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல்களான சுசுகி ஆல்டோ மற்றும் ஹூண்டாய் சாண்ட்ரோவில் துவங்கி மல்டி-யுடிலிட்டி எனப்படும் எம்.யு.வி. மாடல்களான டொயோட்டா இன்னோவா அல்லது கியா கார்னிவல் உள்ளிட்ட அனைத்தையும் குறிக்கும். இதுபோன்ற வாகனங்கள் பெரும்பாலும் தனிநபர் பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டு வருகிறது. சில மாடல்கள் மட்டும் வாடகை டாக்சிக்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
விலை உயர்வு:
இந்திய சந்தையில் ஏற்கனவே கார் உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்கள் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய விதிமுறை காரணமாக கார் மாடல்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேதமும் இருக்க முடியாது.
வழக்கமான எண்ட்ரி லெவல் கார் மாடல்களில் உள்ள முன்புற ஏர்பேக் விலை மட்டும் ரூ. 5 ஆயிரத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. கர்டெயின் ஏர்பேக் விலை அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை செலவாகும். தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்களின் டாப் மாடல்களில் அதிகபட்சமாக ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் விலை ரூ. 10 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.
இரட்டை ஏர்பேக், ஏ.பி.எஸ்., ரியர் வைப்பர்கள் என பாதுகாப்பு அம்சங்களை காரில் பொருத்த குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை செலவாகும் என வல்லுனர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். அவசியம் வழங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத காரணத்தால், கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இதுபோன்ற அம்சங்களை டாப் எண்ட் மாடல்களில் மட்டும் வழங்கி, அதன் விலையை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை கூடுதலாக பெற்றுக் கொள்கின்றன.