சரியான அறிவு இருந்தால் போதும்... விக்ரம் லேண்டரை யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்திருக்கலாம் என பொறியாளர் சண்முக சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
விக்ரம் லேண்ட்ரை அவர் கண்டு பிடித்த விதம் குறித்து பகிர்ந்து கொள்கையில், ’’நாள் ஒன்றிற்கு 7 - 8 மணி நேரங்கள் வீதம் 4 முதல் 5 நாட்களை விக்ரம் லேண்டரை கண்டறிவதற்காக செலவிட்டேன். காலை அலுவலகம் செல்வதற்கு முன்பும், அலுவலகம் முடிந்து திரும்பியது முதலும் நேரத்தை செலவிட்டேன்.
பழையபடம், புதிய படத்தை ஒப்பிட்டுப்பார்த்தேன். சிறு வயது முதலே விண்வெளித்துறையில் ஆர்வம் இருந்தது. நாசா எடுத்த நிலவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தேன். ஒரே ஒரு சிறிய புள்ளியைத் தவிர வேறு மாற்றங்கள் தெரியவில்லை. எனவே அந்தப் புள்ளிதான் லேண்டரின் பாகங்களாக இருக்குமென அக்டோபர் 3ம் தேதி நாசாவுக்கு ட்வீட் செய்தேன். இது தொடர்பாக மின்னஞ்சலும் அனுப்பினேன்.
எனது கண்டுபிடிப்பு குறித்து நாசா பதில் அளிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் தொடர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து பின்னர் என்னுடைய தகவலை வைத்து ஆராய்ச்சி செய்தபோது நாசாவினால் எளிதாக விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க முடிந்தது.
செப்டம்பர் 17ல் நாசா எடுத்த புகைப்படத்தில் இருளில் எடுக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அதற்குப் பின் அக்டோபர் 15ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லேசான வெளிச்சம் இருந்தது. ஆனால் நாசாவினால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அக்டோபரில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே அந்தப் புள்ளியைக் கண்டுபிடித்தேன். பின்னர் நாசா, நவம்பரில் எடுத்த புகைப்படத்தை வைத்து லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். லேண்டர் தரையிறங்கிய குறிப்பிட்ட இடமெல்லாம் எனக்கு தெரியாது. நான் இணையத்தில் தகவல்களை சேகரித்தேன். அதன் மூலமே ஆய்வைத் தொடர்ந்தேன்
ஆர்வம் இருந்தால் எத்தகைய துறையினரும் விண்வெளியில் சாதிக்கலாம். படித்திருக்க வேண்டும் என்கிற தேவையில்லை. இதுகுறித்து படிக்காதவர்கள் கூட இணையத்தில் தேடி விண்வெளி குறித்த ஆய்வை மேற்கொள்ளலாம். சரியான அறிவு இருந்தால் போதும் இதை யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒன்றே. ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இந்நிகழ்வு இருக்கும் என கருதுகிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.