என்ன ஒரு வெகுளித்தனம்... கேட்க கேட்க ஓ.டி.பி.யை அனுப்பி ரூ.68 லட்சத்தைப் பறிகொடுத்த ஐ.டி. ஊழியர்!

By SG Balan  |  First Published Dec 15, 2023, 1:49 PM IST

OTP நம்பரை அனுப்புங்கள் என்று சொன்னாலே மோசடி செய்யத்தான் முயற்சி செய்கிறார்கள் என்பதை ஆதிஷ் உணரவில்லை. இதனால், ரூ.68.6 லட்சத்தை இழந்திருக்கிறார் ஒரு ஐ.டி. ஊழியர்.


பயன்படுத்தப்பட்ட பொருள்களை வாங்கவும் விற்கவும் செய்வதற்கான ஆன்லைன் சந்தையான OLX மூலம் பழைய படுக்கையை விற்க முயன்ற இளம் ஐ.டி. ஊழியர் மூன்று நாட்களில் ரூ.68 லட்சத்தை இழந்திருக்கிறார்.

டிசம்பர் 9ஆம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எச்எஸ்ஆர் லேஅவுட்டில் வசிக்கும் ஆதிஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களின் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

Tap to resize

Latest Videos

ஆதிஷ் சமீபத்தில் OLX இல் தன்னிடம் உள்ள பழைய படுக்கையின் புகைப்படங்களைப் பதிவிட்டு விளம்பரம் செய்துள்ளார். அதன் விலை ரூ.15,000 என்று குறிப்பிட்டிருந்தார். டிசம்பர் 6ஆம் தேதி இரவு 7 மணியளவில், அவருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. பேசியவர் தனது பெயர் ரோஹித் மிஸ்ரா என்றும் இந்திரா நகரில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையின் உரிமையாளர் என்றும் கூறியிருக்கிறார்.

OLX இல் ஆதிஷின் பதிவைப் பார்த்துவிட்டு அவரது படுக்கையை வாங்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். விலையைப் பற்றி விவாதித்த பிறகு, சர்மா ஆதிஷிடம் டிஜிட்டல் பேமெண்ட் செயலி மூலம் பணத்தை அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். ஒரு நிமிடம் கழித்து, தன்னால் UPI ஐடிக்கு பணத்தை அனுப்ப முடியவில்லை என்று கூறிய சர்மா, ஆதீஷிடம் தனக்கு 5 ரூபாய் அனுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி, சர்மா கொடுத்த UPI ஐடிக்கு ரூ.5 அனுப்பினார் ஆதிஷ். பதிலுக்கு, சர்மா அவருக்கு ரூ. 10 அனுப்பியுள்ளார்.

சர்மா மீண்டும் ஆதிஷுக்கு பணம் செலுத்த முடியவில்லை எனக் கூறி ரூ. 5,000 அனுப்பச் சொல்லியிருக்கிறார். தொகையைப் பெற்றுக்கொண்ட சர்மா, ரூ.10 ஆயிரத்தைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். மீண்டும் ஆதிஷிடம் ரூ.7,500 அனுப்பச் சொல்லி, பதிலுக்கு ரூ.15,000 அனுப்புவதாகக் கூறியுள்ளார். ஆனால், தவறுதலாக ரூ. 30,000 அனுப்பிவிட்டதாகச் சொல்லி, பணத்தைத் திருப்பி அனுப்புவதற்கு ஒரு லிங்க் அனுப்பி, OTP நம்பரையும் பகிருமாறு கூறியிருக்கிறார். 

OTP நம்பரை அனுப்புங்கள் என்று சொன்னாலே மோசடி செய்யத்தான் முயற்சி செய்கிறார்கள் என்பதை ஆதிஷ் உணரவில்லை. தான் ஏமாற்றப்படுகிறோம் என்று புரியாமல் சர்மா சொன்னபடி செய்திருக்கிறார் ஆதிஷ். அதிலிருந்து ஆதிஷின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறையத் தொடங்கிவிட்டது.

"அதன்பிறகு, தொடர்ந்து லிங்க்குகளை அனுப்பி, சில தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக பணம் அனுப்ப முடியவில்லை என்று சொன்னார். நான் எனது கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணத்தைத் திரும்ப அனுப்புமாறு கேட்டேன். அவர் தானும் அதற்குதான் முயற்சி செய்வதாகவும் சொன்னார். நான் அவர் ஆன்லைனில் பணம் செலுத்துவதில் அதிக அனுபவம் இல்லாதவர் என்று நினைத்தேன்" என்று ஆதிஷ் சொல்கிறார்.

"எனது பணத்தைத் திருப்பித் தருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறியதால், அவருக்குத் தொடர்ந்து பணம் அனுப்பினேன். அப்போது சர்மா ராஜேஷ் மிஸ்ரா என்ற வேறொருவரின் கணக்கு விவரங்களைத் தந்தார். அதற்கு இரண்டு முறையாக ரூ.15 லட்சமும் ரூ.30 லட்சமும் அனுப்பினேன். டிசம்பர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மொத்தமாக ரூ.68.6 லட்சத்தை இழந்தேன். பிறகும் சர்மா பணம் கேட்டபோதுதான் இது ஒரு மோசடி என்பதை உணர்ந்தேன்" என்று ஆதிஷ் விவரித்தார்.

பொதுவாக இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்படுபவர்களிடம் சுமார் ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. ஆனால், இந்த வழக்கில் பல மடங்கு அதிகமான தொகை பறிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான வழக்குகளில் இதுவே மிக அதிகமான தொகை என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார்.

ஆதிஷ் மோசடி செய்பவர்கள் அனுப்பிய லிங்க்குகளை கிளிக் செய்து OTP களையும் பகிர்ந்துள்ளார். அதனால் தான் பணத்தை இழந்திருக்கிறார். எந்தச் சூழலிலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரிடமும் OTP நம்பரை பகிரவே கூடாது. மேலும், முன்பின் தெரியாத நபர் அனுப்பும் லிங்க் எதையும் கிளிக் செய்யக் கூடாது. இதை மறக்காமல் நினைவில் கொண்டால் இதுபோன்ற மோசடியில் மாட்டிக்கொள்ளமால் தப்பிக்கலாம்.

click me!