சாம்சங் நிறுவன பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் புது தகவல் வெளியாகி உள்ளது.
என்விடியா நிறுவனத்தின் மிகமுக்கிய விவரங்களை இணையத்தில் கசியவிட்ட லப்சஸ் நிறுவனம் தற்போது சாம்சங்கிடம் தனது கைவரசியை காட்டியிருக்கிறது. சாம்சங் நிறுவன சர்வெர்களில் இருந்து சுமார் 190GB மதிப்பிலான தரவுகளை சைலெண்டாக சுருட்டி இருக்கிறது. இதில் ஏராளமான என்க்ரிப்ஷன் மற்றும் செக்யூர் கோட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இதில் சாம்சங்கின் புது சாதனங்களின் விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு பதில் அளித்த சாம்சங், ஹேக்கர்கள் யார் என்ற விவரங்களை வெளியிடவில்லை. மேலும் என்க்ரிப்ஷன் மற்றும் பயோமெட்ரிக் சார்ந்த விவரங்கள் திருடப்பட்டதா என்பதையும் சாம்சங் தெரிவிக்கவில்லை. ஆனால், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதை மட்டும் சாம்சங் உறுதியாக தெரிவித்து உள்ளது.
"நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரிவு சார்ந்த தரவுகளில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. எங்களின் முதற்கட்ட ஆய்வில், கேலக்ஸி சாதனங்களின் செயல்பாடு குறித்த சோர்ஸ் கோட் விவரங்கள் கசிந்திருக்கிறது. எனினும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் களவு போகவில்லை."
"தற்போதைக்கு எங்களின் வியாபாரம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்," என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பதிலில் சாம்சங் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக என்விடியா சர்வர்களில் இருந்து சுமார் 1TB வரையிலான தனிப்பட்ட விவரங்கள், 71 ஆயிரம் ஊழியர்களின் மின்னஞ்சல் முகவரிகளை லப்சஸ் ஹேக் செய்தது. விவரங்களை வெளியிடாமல் இருக்கவும், விற்பனை செய்யாமல் இருக்கவும் என்விடியா தனது 30 சீரிஸ் ஜி.பி.யு.க்களை எத்தரியம் மைனிங்கிற்கு எதிராக டியூன் செய்திருப்பதை கைவிடவும், ஜி.பி.யு. டிரைவர்களை ஓபன்-சோர்ஸ் முறையில் மாற்றவும் லப்சஸ் வலியுறுத்தியது. இதுமட்டுமின்றி என்விடியா சார்பில் குறிப்பிட்ட தொகையை வழங்கவும் லப்சஸ் கோரிக்கை விடுத்தது.