நவம்பர் மாதத்திற்குள்ளாக சாம்சங்கின் எல்லா 5ஜி ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி சேவை கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்று சாம்சங் அறிவித்துள்ளது.
ஆப்பிளின் ஐஃபோனைத் தொடர்ந்து சாம்சங்கின் சில ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி சேவை கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், சாம்சங் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் 5ஜி சேவை குறித்து பேசியுள்ளார். அதன்படி, ‘கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 5G தொழில்நுட்ப மேம்பாட்டில் சாம்சங் நிறுவனம் முன்னோடியாக உள்ளது. அத்துடன் உலகளவில் 5G தொழில்நுட்பத்தை தரப்படுத்துவதில் மிகமுக்கிய பங்கை வகிக்கிறது.
Jio True 5G: அது என்ன True 5G? அசர வைக்கும் அம்சங்கள்..
இந்தியாவில், சாம்சங் 5G சாதனங்களின் பரந்துவிரிந்த பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் நாங்கள் எங்கள் ஆபரேட்டர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், மேலும் 2022 நவம்பர் நடுப்பகுதிக்குள் எங்களின் அனைத்து 5G சாதனங்களிலும் OTA அப்டேட்டுகளை ரிலீஸ் செய்ய உறுதிபூண்டுள்ளோம், இதன் மூலம் இந்தியாவிலுள்ள சாம்சங்க பயனர்கள் 5ஜி சேவையை தடையின்றி அனுபவிக்க முடியும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனால், சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அடுத்த மாதம் நடுப்பகுதிக்குள்ளாக ஏர்டெல் 5ஜி, ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், 5ஜி சேவைக்கான சாப்ட்வேர் அப்டேட்டுகளைக் கொண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் என்று தகவல்கள் வந்துள்ளன.
தற்போது இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் ஏர்டெல் 5ஜி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஜியோ நிறுவனம் சோதனை முயற்சியாக 5ஜி கொண்டு வந்துள்ளது. அடுத்த மாதம் இரு நிறுவனங்களும் 5ஜி சேவையை விரிவுப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.