Galaxy S22 : புதிய எஸ் சீரிஸ் வேற லெவல்ல இருக்கும் - பிப்ரவரி வெளியீட்டை உறுதிப்படுத்திய சாம்சங்

By Nandhini SubramanianFirst Published Jan 21, 2022, 12:24 PM IST
Highlights

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாதம் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் தலைசிறந்த எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் சாம்சங் தெரிவித்து உள்ளது. இவை இதுவரை சாம்சங் உருவாக்கியதிலேயே சிறந்த மாடல்களாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ் சீரிஸ், சாம்சங் கேலக்ஸி ஒட்டுமொத்த அனுபவங்களை ஒற்றை அல்டிமேட் சாதனத்தில் வழங்கும். கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் கேலக்ஸி நோட் அம்சங்கள் வழங்கப்படும் என்பதையும் சாம்சங் உறுதிப்படுத்தி இருக்கிறது.  

"சாம்சங் ஏன் புதிய கேலக்ஸி நோட் சாதனத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யவில்லை என உங்களில் பலர் ஆச்சரியப்பட்டு இருப்பீர்கள் என எங்களுக்கு நன்றாகவே தெரியும். கேலக்ஸி நோட் சீரிஸ் வழங்கிய ஒப்பில்லா கிரியேடிவிட்டி மற்றும் அம்சங்களை நீங்கள் அதிகம் விரும்பி இருந்தீர்கள். கண் சிமிட்டலில் கேமிங் முதல் அதிகளவு ப்ரோடக்டிவிட்டிக்கு ஸ்விட்ச் செய்யும் திறனை கேலக்ஸி நோட் சீரிஸ் கொண்டிருந்தது. எஸ் பென் வழங்கிய பயன்பாடுகளை நீங்கள் எக்கச்சக்கமாக பாராட்டி வந்தீர்கள். நீங்கள் விரும்பிய இந்த அனுபவங்களை நாங்கள் இன்னும் மறக்கவில்லை," என சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் எம்.எக்ஸ். வியாபார பிரிவு தலைவர் டாக்டர். டி.எம். ரோ தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தகவல்களின் படி பில்ட்-இன் எஸ் பென் ஸ்லாட் கொண்ட முதல் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.8 இன்ச் வளைந்த குவாட் HD பிளஸ் 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், எக்சைனோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் 12GB+256GB,12GB+512GB மற்றும் 16GB+1TB போன்ற மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP 3x டெலிபோட்டோ லென்ஸ், 10MP 10x டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிசில் - கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும். இவை வைட், பிளாக், பர்கண்டி, கிரீன் மற்றும் ரோஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. வரும் நாட்களில் புதிய கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம். 
 

click me!