இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்ட புது சேவைக்கான சோதனை முதற்கட்டமாக அமெரிக்காவில் நடைபெறுகிறது.
அமெரிக்காவில் உள்ள சில கிரியேட்டர்கள் சந்தாதாரர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் புது முறையை இன்ஸ்டாகிராம் துவங்க இருக்கிறது. இதன் மூலம் கிரியேட்டர்கள் நேரடியாக வருவாய் ஈட்ட முடியும். இதனால் சந்தாதாரர் ஆக விரும்பும் பயனர்கள் கிரியேட்டர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட இருக்கிறது.
டுவிட்ச்,யூடியூப், டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் அதிக கவனம் ஈர்க்கும் பயனர்களை கொண்டு நிறுவனங்கள் வருவாய் ஈட்டி வருகின்றன. இதன் மூலம் நிறுவனங்கள் முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்கின்றன.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி "Subscriptions are for creators," எனும் தலைப்புடன் வீடியோ ஒன்றை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். "சப்ஸ்கிரிப்ஷன்ஸ் மூலம் கிரியேட்டர்கள் தங்களின் நலம் விரும்பிகளுக்கு பிரத்யேக அனுபவம் வழங்கி அவர்களுடன் நெருக்கமாகலாம். சப்ஸ்கிரைபர் லைவ், சப்ஸ்கிரைபர் ஸ்டோரீஸ், சப்ஸ்கிரைபர் பேட்ஜஸ் என பலவிதங்களில் நலம்விரும்புகளுக்கு பிரத்யேக பதிவுகளை வழங்கலாம்," என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
வரும் மாதங்களில் இந்த சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும். முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில கிரியேட்டர்களுக்கு அமெரிக்காவில் மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தேர்வு செய்யப்படும் கிரியேட்டர்கள் சப்ஸ்கிரிப்ஷன்களை விற்று பிரத்யேக தரவுகளை வழங்கலாம்.
"இன்ஸ்டாகிராமின் ஒட்டுமொத்த அனுபவங்களுடன் சப்ஸ்கிரிப்ஷன்கள் ஒருங்கிணைக்கப்படுவதால், காலப்போக்கில் இதுபோன்ற அம்சங்களை நீட்டிக்க திட்டமிட்டுள்ளோம்," என மொசெரி தெரிவித்தார்.