ஒப்போ நிறுவனம் பேட்டரி இல்லாமல் இயங்கும் IoT சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தொழில்நுட்ப யுகத்தில் பேட்டரிகளின் வளர்ச்சி பல எல்லைகளை கடந்து விட்டது. ஆரம்பத்தில் ஆபத்தானவை என கூறப்பட்ட பேட்டரிகள் தற்போது பாதுகாப்பானவை என அழைக்கப்படுகின்றன. மேலும் பேட்டரிகள் இன்றி எந்த சாதனமும் இயங்காது என்ற நிலை உருவாகி விட்டது. எனினும், ஒப்போ நிறுவனம் இந்த நிலையை அசைக்க நாங்க இருக்கோம் என்ற வகையில் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
ஆய்வு கட்டுரை 'ஜீரோ பவர் கன்சம்ப்ஷன் கம்யூனிகேஷன்' எனும் தலைப்பில் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வின் படி IoT சாதனங்களை ப்ளூடூத், வை-பை மற்றும் மொபைல் போன் சிக்னல்களை கொண்டே சக்தியூட்ட முடியும். துளியும் மின்சக்தி இன்றி இயங்கும் தகவல் பரிமாற்ற முறையை வெற்றிகரமாக உருவாக்கி இருப்பதாக ஒப்போ வெளியிட்டு இருக்கும் ஆய்வு கட்டுரை தெரிவித்து இருக்கிறது.
தற்போதைக்கு இந்த தொழில்நுட்பம் பேட்டரி இன்றி, அளவில் மிக சிறயதாகவும், குறைந்த மின் சக்தியில் இயங்குகிறது. மேலும் இதனை மலிவு விலையில் உருவாக்கி விட முடியும். இதை கொண்டு எதிர்காலத்தில் வெளியாகும் IoT சாதனங்கள் நேரடியாக ப்ளூடூத், வை-பை மற்றும் மொபைல் போன் சிக்னல்களை கொண்டு சக்தியூட்டிக் கொள்ள முடியும்.
தற்போது பெரும்பாலான சாதனங்கள் மின்சக்திக்கு பேட்டரிகளையே நம்பியுள்ளன. பேட்டரிகளை பயன்படுத்தும் போது சில சிக்கல்களும் ஏற்படுகின்றன. இவை அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன, உற்பத்தி செய்ய அதிக செலவாகின்றன, இவற்றின் வாழ்நாளும் மிக குறைவு தான். இத்துடன் இவை சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒப்போ உருவாக்கி இருக்கும் ஜீரோ பவர் கன்சம்ப்ஷன் தொழில்நுட்பம் ஆர்.எப். எனப்படும் radio frequency மூலம் மின்சக்தியை எடுத்துக் கொள்ளும். தொலைகாட்சி டவர்கள், எப்.எம். டவர்கள், செல்லுலார் பேஸ் ஸ்டேஷன் மற்றும் வை-பை அக்சஸ் பாயிண்ட்களில் இருந்து கிடைக்கும் ஆர்.எப். சிக்னல்களை இந்த தொழில்நுட்பம் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த தொழில்நுட்பம் பெரும் ஆலைகள், போக்குவரத்து, ஸ்மார்ட் ஹோம் மற்றும் அணியக்கூடிய சாதனங்களில் சிறப்பாக பயன்படுத்தலாம். இதுதவிர பேட்டரிகள் தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் நீண்ட தூரம் டிராக் செய்ய வேண்டிய தொழில்நுட்பங்களில் இதனை பயன்படுத்த முடியும்.