சாம்சங் நிறுவனம் 2022 QD OLED டி.வி. மாடல்களின் விலை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. எனினும், இவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்களை சாம்சங் அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், புதிய 2022 டி.வி. மாடல்களுக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கி விட்டது என சாம்சங் அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய டி.வி. மாடல்களின் விலை விவரங்களையும் சாம்சங் வெளியிட்டு உள்ளது.
அதன்படி சாம்சங் S95B 4K QD OLED டி.வி. 55 இன்ச் மாடல் விலை 2399.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்து 604 என்றும் 65 இன்ச் மாடல் விலை 3499.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 66 ஆயிரத்து 298 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வழக்கமான எல்.ஜி. OLED டி.வி. மாடல்களின் விலையை விட அதிகம் ஆகும். சாம்சங் மட்டுமின்றி சோனி நிறுவனமும் சாம்சங் நிறுவனத்தின் QD-OLED டிஸ்ப்ளே கொண்ட டி.வி. மாடல்களை அறிவித்து இருக்கிறது.
மற்ற 2022 ஃபிளாக்ஷிப் மாடல்களை போன்றே சாம்சங்கின் OLED நியூரல் குவாண்டம் பிராசஸர் 4K மற்றும் டைசன் மென்பொருள், உயர் ரக கியூ சிம்ஃபனி சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய டிஸ்ப்ளே இயற்கையான நிறங்களை பிரதிபலிக்க செய்வதற்கு ஏற்ற பிரைட்னஸ் பூஸ்டர் மற்றும் பெர்செப்ஷனல் கலர் மேப்பிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர சாம்சங் நிறுவனம் தனது நியோ QLED 8K மற்றும் 4K மினி எல்.இ.டி. டி.வி. மாடல்களில் புதிய மென்பொருள் அப்டேட்கள், அதிகபட்சம் 144Hz வரையிலான வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி 14 பிட் பிராசஸிங், மேம்பட்ட ஆண்டி-ரிஃப்லெக்டிவ் லேயர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 4K மினி எல்.இ.டி. டி.வி. மாடல்கள் சாம்சங்கிடம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் உள்ளன.
புதிய 2022 தி ஃபிரேம் டி.வி. மேட் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக டி.வி. ஓவியங்களை ஒளிபரப்பும் போது, உண்மையான ஃபிரேம் போன்றே காட்சியளிக்கிறது. இந்த டி.வி.ல் மற்ற வகையான ஸ்டிரீமிங் நடைபெறும் போது மட்டுமே தொலைகாட்சி போன்று காட்சியளிக்கும். 2022 ஃபிரேம் டி.வி. மாடல்கள் 43 இன்ச் துவங்கி அதிகபட்சம் 75 இன்ச் வரையில் கிடைக்கின்றன.
புதிய சாம்சங் தி ஃபிரேம் டி.வி. மாடல்களின் விலை 999.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 084 என துவங்குகிறது. விரைவில் 32 இன்ச், 55 இன்ச் மற்றும் 85 இன்ச் அளவுகளிலும் தி ஃபிரேம் டி.வி. மாடல்கள் விற்பனைக்கு வரும் என சாம்சங் அறிவித்து இருக்கிறது.