150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என பேஸ்புக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மியான்மரில் வசித்துவந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 2017-ம் ஆண்டு ரோஹிங்யாக்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆங் சாங் சூகி ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட இந்த ராணுவ தாக்குதலில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரோஹிங்யா இன மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் மியான்மரில் இருந்து வெளியேறி வங்காளதேசம், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையில், ரோஹிங்யா இன மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்கள் மியான்மர் நாட்டில் சமூகவலைதளங்களில் பரவி வந்துள்ளன. பேஸ்புக் மூலம் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும், தாக்குதல் நடத்தும் வகையிலுமான கருத்துக்கள் மியான்மரில் பெரும்பான்மை மக்களால் பகிரப்பட்டுள்ளது. இந்த வெறுப்புணர்வு கருத்துக்களை நீக்க பேஸ்புக் அதிக காலம் எடுத்துக்கொண்டது.
இந்நிலையில், 2017-ம் ஆண்டில் ரோஹிங்யா மக்கள் மீது வன்முறையை தூண்டும் வகையில் வெளியான பதிவுகளை பேஸ்புக் உடனடியாக நீக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அந்த வகையில், ரோஹிங்யாக்கள் மீது வன்முறையை தூண்டும் வகையில் பேஸ்புக் செயல்பட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று பேஸ்புக் 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தற்போது அகதிகளாக வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களில் சிலர் பேஸ்புக் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்தில் தனித்தனியே வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திற்கு ரோஹிங்யா அகதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே பேஸ்புக் பெயர் மாற்றத்திற்குப் பின் மெட்டா நிறுவனத்தின் சந்தை கடந்த 3 மாதத்தில் மொத்த மதிப்பில் சுமார் 224 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த பிரச்சனை மேலும் பேஸ்புக்குக்கு நெருக்கடியை கொடுத்து இருக்கிறது.