ரிலையன்ஸ் ஜியோவின் சம்மர் சர்பிரைஸ் திட்டம் இம்மாதத்துடன் நிறைவுபெறும் நிலையில், புதிய திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது. மேலும் இதில் வழங்கப்பட்ட முந்தைய திட்டத்தில் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜியோவை புதிதாகக் அறிமுகப்படுத்தியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நெட்வொர்க். வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் அனைத்து இலவச வாய்ஸ் கால், இலவச இன்டர்நெட் டேட்டா உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் அறிவிக்கப்பட்டது.
ஜியோவின் இந்த அதிரடியால் 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்தது. ஜியோவின் வருகையால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டது. முதலில் டிசம்பர் மாத இறுதி வரை இலவசம் வழங்கப்பட்டு அதன் பின், மார்ச் மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து ‘தன் தனா தன்’ என்ற பெயரில் இலவச சலுகைகளுக்கு குறைந்த கட்டணம் விதிக்கப்பட்டு அதிரடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த ரூ.309 திட்டத்தில் கால வரம்பானது 28 நாள்களிலிருந்து 56 வரை அதிகரிக்கப்பட்டது. இதனை அடுத்து ரூ.509 திட்டத்தில் 28 நாளிலிருந்து 56 நாள்களுக்குச் சலுகைகள் நீட்டிக்கப்பட்டது.
ரூ.399 திட்டத்தில் மூன்று மாதங்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 1 GB டேட்டாவும் அன்லிமிடெட் கால் வசதியும் வழங்கப்படுகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.349 திட்டத்தில் 56 நாள்களுக்கு 20 GB. அளவிலான 4G டேட்டா வழங்கப்படுகிறது.
மேலும், ரூ.149 திட்டத்தில் 28 நாள்களுக்கு 2 GB. அளவிலான டேட்டாவும், 300 இலவச SMS வசதியும். ரூ.999 திட்டத்தில் 90 நாள்களுக்கு 90 GB. அளவிலான டேட்டா வசதியும், ரூ.4,999 திட்டத்தில் 210 நாள்களுக்கு 380 GB. அளவிலான டேட்டாவும், ரூ.9,999 திட்டத்தில் 390 நாள்களுக்கு 780 GB. அளவிலான டேட்டா வழங்கப்படுகிறது.