கடலில் காணாமல் போகும் மீனவர்கள், படகுகள், கப்பல்கள் உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடிக்க, மொபைல் “ஆப்ஸ்” (செயலி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடல் சேவை மையத்துக்கான இந்திய தேசிய மையம் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை ஸ்மார்ட்போன்களில் பதிவேற்றம் செய்து, கடலில் தத்தளிப்பவர்கள், காணமல் போனவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை அருகே டார்னியர் விமானம் கடலில் மாயமானது. அதைக் கண்டுபிடிக்க, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான மென்பொருளை சூப்பர் கம்யூட்டர் மூலம் இயக்கப்பட்டு, தேடுதல் நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆப்ஸும் சூப்பர் கம்யூட்டர் மூலம் இயங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.
புதுடெல்லியில், 16-வது தேசிய கடல்சார் ஆய்வு மற்றும் மீட்பு வாரியத்தின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஐதராபாத்தில் செயல்படும் கடல் சேவை மையத்துக்கான இந்திய தேசிய மையம், “தேடுதல் மற்றும் மீட்பு உதவிக்கான கருவி” எனும் பெயரில் “சரத்”(SARAT) ஆப்ஸை அறிமுகம் செய்தது.
இந்த ஆப்ஸ் குறித்து கடல் அறிவியல் மற்றும் தகவல் குழுவின் தலைவர் டி.எம். பாலகிருஷ்ணன் கூறுகையில், “ நாங்கள் அறிமுகப்படுத்திய இந்த செயலி மூலம் கடலில் காணாமல் போகும் 64 வகையான பொருட்களை கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக மனிதர்கள், படகுகள், கப்பல்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்க முடியும். இந்த மென்பொருளை உருவாக்க 5ஆண்டுகள் தேவைப்பட்டது. முதல்கட்டமாக இந்த மொபைல்ஆப்ஸ் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்படும். இதை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று மீனவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், 9 வகையான கடலோர மாநில மொழிகளில் இந்த ஆப்ஸ் இயங்கும்.
கடலில் இருந்து 10 கி.மீ. தொைலவுக்குள் இருக்கும் மீனவர்கள், செல்போனில் நெட்வொர்க் கிடைத்தால், இதை பயன்படுத்த முடியும். இது குறிப்பாக மீனவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து விரைவில் கடற்படை பாதுபாப்பு படையினர் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த செயலியை பயன்படுத்தும் போது, அதாவது தேடுதல் பணியில் ஈடுபடும் போது, காணமல் போன பொருள், மனிதர்கள் கடைசியாக எங்கு இருந்தார்கள் என்ற விவரத்தை அதில் குறிப்பிட வேண்டும்.
மேலும், காணமல் போன இடத்தில் இருந்து எத்தனை கடல்மைல் தொலைவில் இருக்கிறோம், அல்லது அருகே இருக்கும் கடற்பகுதி குறித்து குறிப்பிட வேண்டும்.
இந்த செயலி செயல்பாடு முழுவதும் சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள், செயற்கைக்கோள் துணையுடன் செயல்படுபவை. ஆதலால், விரைவாக கண்டுபிடிக்க முடியும். மேலும், மீனவர்கள் ஜி.பி.எஸ். உதவியுடன் தேடிவந்தால், அவர்களுக்கு இந்த செயலி தேடுதலை விரைவாக செய்ய வழிவகை செய்யும்” எனத் தெரிவித்தார்.