அதிகபட்சமாக ரூ. 6 வரையிலான சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேடிஎம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
பேடிஎம் செயலியில் மேற்கொள்ளப்படும் ரிசார்ஜ்களுக்கு சேவை கட்டணம் விதிக்கப்படுவதற்கு பயனர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 2019 வாக்கில் பேடிஎம் தளத்தில் கார்டுகள், யு.பி.ஐ. மற்றும் வாலெட் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என பேடிஎம் அறிவித்து இருந்தது. எனினும், பேடிஎம் செயலி கொண்டு மேற்கொள்ளப்படும் ரிசார்ஜ்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொபைல் ரிசார்ஜ்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1இல் இருந்து அதிகபட்சமாக ரூ. 6 வரையிலான சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேடிஎம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், போன்பெ போன்றே பேடிஎம் செயலியிலும் பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பேடிஎம் செயலியில் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்த போது பேடிஎம் சார்பில் ரூ. 1 சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று விலை உயர்ந்த ரூ. 3 ஆயிரத்து 359 சலுகையில் ரிசார்ஜ் செய்யும் போது ரூ. 6 சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
அனைவருக்கும் சேவை கட்டணம்:
சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேறொரு நபரின் மொபைல் போன் மூலம் ரிசார்ஜ் செய்ய முயன்ற போது, மொபைல் ரிசார்ஜ்-க்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. அந்த வகையில் பேடிஎம் செயலியில் மொபைல் ரிசார்ஜ் மேற்கொள்ளும் அனைவருக்கும் சேவை கட்டணம் வசூலிக்கப்படவில்லை என தெரியவந்து இருக்கிறது.
எனினும், சிலருக்கு மட்டும் ரூ. 1 முதல் அதிகபட்சமாக ரூ. 6 வரையிலான சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில பயனர்கள் பேடிஎம் வாலெட் மற்றும் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் போதும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தங்களின் ட்விட்டரில் குற்றம்சாட்டி உள்ளனர்.