தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நோக்கத்தில், பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்தோடு கை கோர்த்து சிம் கார்டுகளை விற்பனைசெய்து வருகிறது. அதோடு சேர்த்து வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக ‘கிம்போ’ என்ற செயலி ஒன்றையும் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கிம்போ என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. அதற்கு ‘நலமாக இருக்கிறீர்களா’ என்று பொருள். இந்தியாவின் முதல் சாட் (chat) செயலி இது என்ற அறிவிப்போடு இந்தச் செயலியை வெளியிட்டுள்ள பதஞ்சலி நிறுவனம்.
இந்நிலையில் கிம்போ செயலி பதஞ்சலி நிறுவனம் தயாரித்தது அல்ல, அது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உருவாக்கப்பட்ட ‘Bolo Messenger App” செயலி என தகவல் வெளியாகியுள்ளது. அதுவே தற்போது பதஞ்சலி நிறுவனத்தால் கிம்போ என பெயர் மாற்றப்பட்டுள்ளதகாவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கிம்போ செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கும் போது, அதில் ‘Bolo Messenger App” யில் உங்கள் நண்பர்களை தேடலாம் என வருகிறது. அதுமட்டுமின்றி மேலும் சில குறிப்புகளிலும் போலோ செயலி என்று உள்ளது.
Kimbho செயலியை நீங்கள் பயன்படுத்த தொடங்கியதும், கிம்போவிற்கு வரவேற்கிறோம். பாரத்தின் முதல் மெசேஜிங் செயலி என்ற மெசேஜ் வருகிறது. ஆனால் Kimbho இணையதளத்தில் Bolo team என்று காட்சியளிக்கிறது.
Kimbho வின் முகநூல் பக்கம் Kimbho செயலியின் புகைப்படம் மற்றும் பெயரில் உள்ளது. ஆனால் 2016 பிப்ரவரி மாதம் முதலே செயலி செயல்படுவதாகவும், அப்போது Bolo App என்ற பெயர் கொண்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் Bolo வின் ட்விட்டர் பக்கத்தில் Bolo Chat என்ற செயலி 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் Bolo chat என்ற செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்யும் போது, அது பதஞ்சலி நிறுவத்தின் பெயரில் மாற்றப்பட்டிருப்பதும் தெரிகிறது.
Kimbho செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்யும் போது, அது ஆப்டியோஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக இணையத்தில் தேடும் போது, அதன் நிறுவனர் சுமித் குமார் என்பதும், அவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. அவரது போட்டோ Bolo chat என்ற செயலியின் முகப்பு படமாகவும் உள்ளது.
ஆப்டியோஸ் என்ற அந்த நிறுவனம் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரியை பார்க்கும் போது, அது கலிபோர்னியாவை குறிப்பிட்டு காட்டுகின்றது. இதனால் Bolo chat என்ற செயலியை பெயர் மாற்றம் செய்தே பதஞ்சலி நிறுவனத்தின் Kimbho App என்ற பெயரில் வெளியிட்டுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.