ஒப்போ நிறுவனத்தின் புதிய 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உங்களின் ஸ்மார்ட்போனை அதிவேகமாக சார்ஜ் செய்துவிடும்.
ஒப்போ நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தனது 150 வாட் SuperVOOC சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 0 முதல் 100 வரை சார்ஜ் செய்ய கால் மணி நேரத்தையே எடுத்துக் கொள்ளும் என ஒப்போ அறிவித்து உள்ளது.
பேட்டரிகளை பயன்படுத்தும் போது அதிக கவனமாக செயல்பட வேண்டும் என நாம் அனைவருக்குமே தெரியும். சாதனங்களை தொடர்ச்சியாக பயன்படுத்த அதில் உள்ள பேட்டரியை அவ்வப்போது அவற்றை சார்ஜ் செய்வது, பயணங்களின் போது தீர்ந்து போகும் பேட்டரியை சார்ஜ் செய்வது உள்ளிட்டவைகளில் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம்.
எனினும், கைவசம் இருக்கும் பவர்பேங்க் போன்ற சாதனங்களும் செயலற்று போகும் போது பவர் அவுட்லெட் நோக்கி படையெடுப்பதோடு, கால்கடுக்க நின்று கொண்டு சாதனம் சார்ஜ் ஏறும் வரை காத்திருக்கும் நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதே அந்த சூழலில் இருபப்பவர்களின் மன நிலையாக இருக்கும்.
இந்த நிலையை வெகுவாக மாற்றவே முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. தொடர் முயற்சியின் விளைவாகவே தற்போது பல நிறுவனங்கள் 150 வாட் திறன் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை உருவாக்கி இருப்பதாக தொடர்ந்து அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தான், ஒப்போ தனது 150 வாட் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் கொண்டு 4500mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய கால் மணி நேரமே ஆகும். மேலும் இதே பேட்டரியை 1 சதவீதம் தொடங்கி 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்களே ஆகும். இதே பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய கூடுதலாக பத்து நிமிடங்கள் காத்திருந்தாலே போதும்.
அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பங்கள் நமக்கு புதிதல்ல என்ற போதிலும், அதிவேகமாக பேட்டரியை சார்ஜ் செய்யும் போதும் பேட்டரி ஆயுளை குறைக்காமல் இருப்பதே ஒப்போ நிறுவனத்தின் புதிய 150 வாட் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் தனி சிறப்பு ஆகும். இந்த சார்ஜர் கொண்டு 1600 சார்ஜ் சைக்கிள்களை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என ஒப்போ அறிவித்து இருக்கிறது.
மேலும் இவ்வாறு செய்த பின்பும் பேட்டரி ஆயுள் 80 சதவீதத்தில் தான் இருக்கும் என ஒப்போ தெரிவித்துள்ளது. அளவில் புதிய 150 வாட் SuperVOOC பவர் அடாப்டர், ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த 140 பவர் அடாப்டரை விட சிறியதாகவே இருக்கிறது.