அமெரிக்க சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்று கூகுளை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் சமீப ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. மெல்ல ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகமாக நிர்ணயம் செய்வது, ஒப்போ நிறுவனத்துடனான இணைப்பு மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ்.-க்கு மாற்றாக கலர்ஓ.எஸ். வழங்க இருப்பது போன்ற அறிவிப்புகளால் ஒன்பிளஸ் நிறுவனம் கடும் விமர்சனங்களை எதிர்கொகண்டது.
இந்த நிலையில், அமெரிக்க ஸ்மைார்ட்போன் சந்தையின் விற்பனை பற்றிய ஆய்வறிக்கை ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. தனியார் ஆய்வு நிறுவனமான கவுண்ட்டர்பாயிண்ட் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, ஒன்பிளஸ் நிறுவனம் அமெரிக்க சந்தையில் 524 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் கூகுளை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
வருடாந்திர அடிப்படையில் கூகுள் நிறுவனம் 56 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் இத்தகைய வளர்ச்சியை பதிவு செய்ய அந்த நிறுவனத்தின் நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. டி மொபைல் மற்றும் 2 ஆயிரம் வால்மார்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் நார்டு சீரிஸ் விற்பனையில் தொடர்ந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்க சந்தையில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. 2021 நான்காவது காலாண்டு வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்க சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் 9 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதற்கு முக்கிய காரணியாக மோட்டோ ஜி பியூர் மாடல் இருக்கிறது. இது கடந்த காலாண்டில் மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல் ஆகும்.
அமெரிக்க சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த நாட்டில் மொத்தமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் 50 சதவீத ஐபோன்கள் ஆகும். ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 சீரிஸ் விற்பனை காரணமாக ஆப்பிள் நிறுவனம் கடந்த காலாண்டை 57 சதவீத பங்குகளுடன் நிறைவு செய்து இருக்கிறது. இதன் வருடாந்திர விற்பனை 17 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 24 சதவீத பங்குகளுடன் அமெரிக்க சந்தையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் அமெரிக்க சந்தையில் சாம்சங் நிறுவனம் கடந்த காலாண்டில் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.