OnePlus 10R: 150W சார்ஜிங் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன்.. விரைவில் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்..!

By Kevin KaarkiFirst Published Apr 14, 2022, 4:39 PM IST
Highlights

OnePlus 10R: இந்திய சந்தையில் அதிவேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஒன்பிளஸ் மாடல் பெற இருக்கிறது.

ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு CE 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை இதே தேதியில் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அறிவிப்பின் படி ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதிவேக சார்ஜிங்:

அந்த வகையில் இந்திய சந்தையில் அதிவேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஒன்பிளஸ் மாடல் பெறும் என எதிர்பார்க்கலாம். எனினும் ஒன்பிளஸ் 10R மாடலில் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஒன்பிளஸ் 10R மாடலின் பேஸ் வேரியண்டில் 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 10R மாடலில் 4500mAh பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி ஆரோக்கியம்:

ஃபாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தும் பட்சத்தில் பேட்டரியின் ஆயுள் மிக வேகமாக கரைந்துவிடும். இதற்கு ஒன்பிளஸ் 10R மாடலும் விதிவிலக்காக இருக்காது. நீண்ட காலம் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்குவதில் ஒன்பிளஸ் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் பேட்டரி சீக்கிரம் பாழாகி போவதை தடுக்கும் வசதியை ஒன்பிளஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலில் வழங்கலாம் என எதிர்பார்க்கலாம். 

இதுவரை வெளியாகி இருக்கும் டீசர் மற்றும் ரெண்டர்களை வைத்து பார்க்கும் போது ஒன்பிளஸ் 10R மாட லில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது. இந்த அம்சத்தினை ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ போன்ற பிரீமியம் மாடல்களில் மட்டும் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

சியோமி மாடல்கள்:

சியோமி  நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்து இருக்கும் சியோமி 11T ப்ரோ மாடலில் 5000mAh பேட்டரி மற்றும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் 10R மாடல் 150 வாட் சார்ஜிங் திறன் கொண்டு அளவில் சிறிய பேட்டரியை அதே நேரத்தில் சார்ஜ் செய்து விடலாம் என தெரிவித்து இருக்கிறது. 

எதிர்பார்க்கப்படும் விலை:

இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் விலை ரூ. 40 ஆயிரத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட  ஒன்பிளஸ் 10R பேஸ் வேரியண்ட் விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம். 

click me!