2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலை மே 1 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். புதிய சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2022 சி கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் மே 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வடிவமைப்பு, தோற்றம் மற்றும் அம்சங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் ஃபிளாக்ஷிப் எஸ் கிளாஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் செமிகண்டக்டர் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த மாடலின் இந்திய வெளியீடு தாமதம் ஆகி இருக்கிறது. புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடல் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே அருகில் உள்ள சக்கன் ஆலையில் அசெம்பில் செய்யப்பட இருக்கிறது. புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.
முன்பதிவு தொடக்கம்:
முதற்கட்டமாக மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேக முன்பதிவு நடைபெறுகிறது. இந்த முன்பதிவு நேற்று (ஏப்ரல் 13) துவங்கிய நிலையில், ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனைத்து வாடிக்கையாளர்களும் 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலை மே 1 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். புதிய 2022 மெரிசிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மெர்சிடிஸ் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை:
"புதிய சி கிளாஸ் மாடல் அசத்தலான டிசைன், சவுகரியம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் அம்சங்கள் எஸ் கிளாஸ் மாடலின் அருகில் செல்லும் வகையில் இருக்கும். பேபி எஸ் கிளாஸ் என சொல்லும் வகையில் புதிய சி கிளாஸ் மாடல் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளியீட்டுக்கு முன்பே எங்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் புது சி கிளாஸ் மாடல் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அவர்களின் விசுவாசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், காருக்காக நீண்ட காலம் காத்திருக்கும் காரணத்தாலும் முதல் முறையாக எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் புதிய சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவை அனுமதித்து இருக்கிறோம்," என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்டின் ஸ்கிவென்க் தெரிவித்தார்.
டிசைன்:
புதிய சி கிளாஸ் மாடலின் முகம் கூர்மையாக காட்சி அளிக்கிறது. இதன் முன்புறம் புதிய மற்றும் பெரிய ரேடியேட்டர் கிரில், மெல்லிய ஹெட்லைட்கள், ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர், பெரிய இன்டேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பின்புறம் 2-பீஸ் டெயில் லைட்கள் வழஙஅகப்பட்டுள்ளன. இவை இ கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
இண்டீரியர்:
2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலில் 11.9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, இரண்டாம் தலைமுறை MBUX இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 9.5 இன்ச் செண்டர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் புதிய இண்டீரியர் மற்றும் அதிக ஆடம்பரம் மிக்க சீட்கள் உள்ளன. மேலும் இதன் வீல்பேஸ் 25 மில்லிமீட்டர் அதிகரித்து 2865 மில்லிமீட்டர் அளவில் உள்ளது.
என்ஜின்:
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படுகிறது. மேலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் மிகப் பெரும் அப்டேட்களில் ஒன்றாக ரியர் வீல் ஸ்டீரிங் உள்ளது. எனினும் இந்திய மாடலில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.