ஸ்ரீநாத் மேனன் என்ற நபர் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் வேலை செய்யவில்லை என ட்விட்டரில் தெரிவித்தார்.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இம்முறை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மெக்கானிக்கல் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக பேட்டரி தீப்பிடித்து எரிவது, நிர்வாகம் சரியாக பதில் அளிக்காதது மற்றும் வாடிக்கையாளர்களை விபத்தில் சிக்க வைத்தது என பல்வேறு பிரச்சினைகளில் ஓலா எலெக்ட்ரிக் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உறுதித் தன்மை குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
வாடிக்கையாளர் ஒருவர் ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென முன்புற சஸ்பென்ஷன் யூனிட் இயங்காமல் போனது என குற்றம் சாட்டி உள்ளார். ஸ்ரீநாத் மேனன் என்ற நபர் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் வேலை செய்யவில்லை என ட்விட்டரில் தெரிவித்தார். இதை அடுத்து மற்றொரு பயனர், தனக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது என தெரிவித்து இருக்கிறார்.
சஸ்பென்ஷன்:
இவரது ட்விட்டர் பதிவின் படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருந்த போது, சஸ்பென்ஷன் வேலை செய்யாமல் போனதை அடுத்து சுவரில் மோதியதாக தெரிவித்து உள்ளார். இத்துடன் சஸ்பென்ஷன் இயங்காமல் போனதை தெரிவிக்கும் புகைப்படங்களை ஒருவர் வெளியிட்டார்.
The front fork is breaking even in small speed driving and it is a serious and dangerous thing we are facing now, we would like to request that we need a replacement or design change on that part and save our life from a road accident due to poor material usd pic.twitter.com/cgVQwRoN5t
ஓலா ஸ்கூட்டரின் முன்புற சஸ்பென்ஷன் இயங்காமல் போனது பற்றி ஏற்கனவே ஒரு பயனர் குற்றம்சாட்டி இருந்தார். அதன்படி முன்புற சஸ்பென்ஷன் இயங்காததால், முன்னே சென்று கொண்டு இருந்த வாகனத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோதியது. இதுவரை மூன்று முறை ஓலா ஸ்கூட்டரின் முன்புற சஸ்பென்ஷன் இயங்காமல் போனது பற்றி ஓலா நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அன்றாட பயன்பாடுகளின் போது அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் சீராக இயங்க வேண்டிய மிக முக்கிய அம்சம் சஸ்பென்ஷன் தான். இந்திய சாலைகளின் தரம் மற்ற நாடுகளை விட மோசமாக இருப்பதை அடுத்து பல்வேறு நிறுவனங்களும் சஸ்பென்ஷன் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உறுதியானவைகளாக உருவாக்கி வழங்குகின்றன. இந்த நிலையில், ஓலா ஸ்கூட்டரில் முன்புற சஸ்பென்ஷன் இயங்காமல் போவது, பாதுகாப்பிற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.